புதன், 30 ஏப்ரல், 2014

அறிவுத் திறனின் வளர்ச்சிக்காக - தோப்புக்கரணம்



காலத்தில் தோப்புக்கரணம் போடுவது என்பது பள்ளிகளில் மிகச் சாதாரணமான விஷயம். தவறு செய்தாலோ, வீட்டுப்பாடம் எழுதி வரா விட்டாலோ ஆசிரியர்கள் மாணவர்களைத் தோப்புக்கரணம் போட வைப்பது வாடிக்கை. பரிட்சை சமயத்தில் பக்தி அதிகரித்து மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற தாங்களாகவே பிள்ளையார் முன் தோப்புக்கரணம் போடுவதுமுண்டு. ஆனால் இக்காலத்தில் தோப்புக்கரணம் போடுவதை அதிகமாக நாம் காண முடிவதில்லை.

ஆனால் இந்த தோப்புக்கரணம் அமெரிக்காவில் ஆராய்ச்சிக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது என்று சொன்னால் ஆச்சரியமாக இருக்கிறதல்லவா? லாஸ் ஏஞ்சல்ஸைச் சேர்ந்த மருத்துவர் எரிக் ராபின்ஸ் (Dr.Eric Robins) இந்த எளிய உடற்பயிற்சியால் மூளையின் செல்களும் நியூரான்களும் சக்தி பெறுகின்றன என்கிறார். அவர் தன்னிடம் வரும் நோயாளிகளுக்கு அந்த உடற்பயிற்சியை சிபாரிசு செய்வதாகக் கூறுகிறார். பரிட்சைகளில் மிகக் குறைந்த மதிப்பெண்கள் எடுக்கும் ஒரு பள்ளி மாணவன் தோப்புக்கரண உடற்பயிற்சியைச் சில நாட்கள் தொடர்ந்து செய்த பின் மிக நல்ல மதிப்பெண்கள் வாங்க ஆரம்பித்ததாகக் கூறுகிறார்.


யேல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நரம்பியல் நிபுணரான டாக்டர் யூஜினியஸ் அங் என்பவர் காதுகளைப் பிடித்துக் கொள்வது மிக முக்கிய அக்குபஞ்சர் புள்ளிகளைத் தூண்டி விடுகின்றன என்று சொல்கிறார். அதனால் மூளையின் நரம்பு மண்டல வழிகளிலும் சக்தி வாய்ந்த மாற்றங்கள் ஏற்படுவதாக அவர் தெரிவிக்கிறார். இடது கையால் வலது காதையும், வலது கையால் இடது காதையும் பிடித்துக் கொண்டு உட்கார்ந்து எழுகையில் மூளையின் இரு பகுதிகளும் பலனடைகின்றன என்று சொல்கிறார்.

தோப்புக்கரணம் போடுவதால் ஏற்படும் மாற்றங்களை EEG கருவியால் டாக்டர் யூஜினியஸ் அங் அளந்து காண்பித்தார். மூளையில் நியூரான்கள் செயல்பாடுகள் அதிகரிப்பதை பரிசோதனையில் காண்பித்த அவர் மூளையின் வலது, இடது பாகங்கள் சமமான சக்திகளை அடைவதாகவும் சொன்னார். மிக நுண்ணிய தகவல் அனுப்பும் காரணிகள் வலுப்பெறுவதும் பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. டாக்டர் யூஜினியஸ் அங் தானும் தினமும் தோப்புக்கரணம் போடுவதாகக் குறிப்பிடுகிறார்.

Autism, Alzheimer போன்ற இக்காலத்தில் அதிகரித்து வரும் நோய்களுக்குக் கூட இந்த தோப்புக்கரண உடற்பயிற்சியை ஆராய்ச்சியாளர்கள் பரிந்துரைக்கிறார்கள். தோப்புக்கரணம் தினமும் செய்வதன் மூலம் மேற்கண்ட நோய்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மிக நல்ல பலன்களைப் பெறுவதாக அவர்களது பரிசோதனைகள் சொல்கின்றன.

ப்ராணிக் சிகிச்சை நிபுணர் கோ சோக் சூயி (Master Koa Chok Sui) தன்னுடைய Super Brain Yoga என்ற புத்தகத்தில் தோப்புக்கரணத்தைப் பற்றியும் அதன் பலன்கள் பற்றியும் குறிப்பிட்டுள்ளார். தன்னுடைய சொற்பொழிவுகளிலும் இதை அதிகம் குறிப்பிடுகிறார்.

இதனால் தான் தோப்புக்கரணம் பள்ளிகளில் நம் முன்னோர்களால் நடைமுறைப்படுத்தப்பட்டு இருக்கலாம் என்று தோன்றுகிறது. படிக்காத மாணவர்கள் தோப்புக்கரண முறையால் தண்டிக்கப்படுவதன் மூலம் அவர்களது அறிவுத் திறன் அதிகரிக்க வழியும் காண்பிக்கப்பட்டிருக்கிறது என்று தோன்றுகிறது.

இந்த தோப்புக்கரணப்பயிற்சியை தினந்தோறும் மூன்று நிமிடங்கள் செய்தால் போதும் வியக்கத் தக்க அறிவு சார்ந்த மாற்றங்களைக் காணலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். அவர்கள் பரிந்துரைக்கும் தோப்புக்கரண பயிற்சியை அவர்கள் சொல்கின்ற முறையிலேயே காண்போமா?

உங்கள் கால்களை உங்கள் தோள்களின் அகலத்திற்கு அகட்டி வைத்து நின்று கொள்ளுங்கள். உங்கள் பாதங்கள் நேராக இருக்கட்டும். வலது காதை இடது கையின் பெருவிரலாலும் ஆட்காட்டி விரலாலும் பிடித்துக் கொள்ளுங்கள். அதே போல் இடது காதை வலது கையின் பெருவிரலாலும் ஆட்காட்டி விரலாலும் பிடித்துக் கொள்ளுங்கள். பிடித்துக் கொள்ளும் போது இடது கை உட்புறமாகவும், வலது கை வெளிப்புறமாகவும் இருக்க வேண்டும் என்பது முக்கியம்.

மூச்சை நன்றாக வெளியே விட்டபடி அப்படியே உட்கார்ந்து மூச்சை உள்ளே நன்றாக இழுத்தபடி எழுந்து நில்லுங்கள். மூச்சும், உட்கார்ந்து எழுவதும் ஒரு தாளலயத்துடன் இருக்கட்டும்.

செய்து பழக்கமில்லாதவர்களுக்கு ஆரம்பத்திலேயே மூன்று நிமிடங்கள் தொடர்ந்து தோப்புக்கரணம் செய்வது கடினமாக இருக்கலாம். அப்படிப்பட்டவர்கள் ஒரு நிமிடம் செய்வதில் இருந்து ஆரம்பித்து நாட்கள் செல்லச் செல்ல இரண்டு நிமிடங்கள், பிறகு மூன்று நிமிடங்கள் என்று அதிகரியுங்கள்.

தூங்கும் முறை

மனிதனின் அடிப்படைத் தேவைகளில் முக்கியமான ஒன்றுதான் உறக்கம் எனும் தூக்கமாகும். இது உடலின் ஆரோக்கியத்தைக் காப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றது.

மனிதனின் வாழ்நாளில் மூன்றில் ஒரு பங்கு தூக்கத்தில் தான் கழிகின்றது. உடலிலுள்ள கோடிக்கணக்கான செல்களை தினமும் புதுப்பிக்கவும், உடலின் சோர்வு நீங்கி புத்துணர்வு பெறவும், உடல் வளர்ச்சி [குறிப்பிட்ட வயது வரை ]பெறவும், தூக்கம் இன்றியமையாததாக உள்ளது.


இரவில் தூங்கும் போதுதான் உடலின் வளர்ச்சி அதிகரிக்கின்றது என்று இன்றைய அறிவியலாளர்கள் கூறுகின்றனர்.

தூங்குவதைப் பற்றியும் அதில் உள்ள அறிவியல் உண்மைகளையும் சித்தர் பெருமக்கள் தங்கள் நூல்களில் வடித்துள்ளனர்.

தூங்குவதற்கு ஏற்ற காலம் இரவு மட்டும் தான் என்பது இயற்கையின் விதிகளில் ஒன்று. பூமியின் தட்ப வெட்ப நிலைகள் மாறி இரவில் குளிர்ச்சி பொருந்திய சூழ்நிலைதான் தூங்குவதற்கு ஏற்ற காலமாகும். ஆனால் இன்றைய நாகரீக உலகில் இணையதள நிறுவனங்களில் வேலை பார்க்கும் பலரும் இரவில் கண் விழித்து பகலில் தூங்குகின்றனர். இதனால் என்ன தீமைகள் விளையும் என்பது பற்றி சித்தர் பாடல் ஒன்று.

சித்த மயக்கஞ் செறியும் புலத்தயக்க மெத்தனுக்
கமைந்த மென்பவை களித்தமுற வண்டுஞ் சிலரை
நாயாய்ப் பன்னோய் கவ்வுமிராக் கண்டுஞ் சிலரை
நம்பிக் காண்

இதன் விளக்கம் :-

இரவில் நித்திரை செய்யாதவர்களிடத்தில் புத்தி மயக்கம், தெளிவின்மை, ஐம்புலன்களில் [உடலில்]சோர்வு, பயம், படபடப்பு, அக்னி மந்தம், செரியாமை, மலச்சிக்கல், போன்ற நோய்கள் எளிதில் பற்றும்.

வேட்டைக்குச் செல்லும் வேடருடைய நாய்கள் இரையைக் கவ்வுதல் போல் இரவில் நித்திரையில்லாதவரை பற்பல நோய்கள் கவிக் கொள்ளும்.

எந்த திசையில் தலை வைத்து படுக்க வேண்டும் என்பதை சித்தர்கள் அன்றே தெளிவாகக் கூறியுள்ளனர்.

உத்தமம் கிழக்கு, ஓங்குயிர் தெற்கு, மத்திமம் மேற்கு, மரணம் வடக்கு.

கிழக்கு திசையில் தலை வைத்து படுப்பது மிகவும் நல்லது. தெற்கு திசையில் தலை வைத்துப் படுத்தால் ஆயுள் வளரும். மேற்கு திசையில் தலை வைத்துப் படுத்தால் கனவு,அதிர்ச்சி உண்டாகும். வடக்கு திசையில் ஒரு போதும் தலை வைத்து தூங்கக் கூடாது.

இதனை விஞ்ஞான ரீதியாகவும் ஒப்புக்கொண்டுள்ளனர். வடக்கு திசையில் இருந்து வரும் காந்தசக்தி தலையில் மோதும் போது அங்குள்ள பிராண சக்தியை இழக்கும். இதனால் மூளை பாதிக்கப் படுவதுடன், இதயக் கோளாறுகள், நரம்புத்தளர்ச்சி உண்டாகும்.

மேலும் மல்லாந்து கால்களையும், கைகளையும் அகட்டி வைத்துக் கொண்டு தூங்கக் கூடாது. இதனால் இவர்களுக்குத் தேவையான ஆக்ஸிஜன் [பிராண வாயு] உடலுக்குக் கிடைக்காமல் குறட்டை உண்டாகும். குப்புறப் படுக்கக் கூடாது, தூங்கவும் கூடாது.

இடக்கை கீழாகவும், வலக்கை மேலாகவும் இருக்கும்படி கால்களை நீட்டி இடது பக்கமாக ஒருக்களித்து படுத்து தூங்கவேண்டும். இதனால் வலது மூக்கில் சுவாசம் சூரியகலையில் ஓடும். இதில் எட்டு அங்குலம் மட்டுமே சுவாசம் வெளியே செல்வதால் நீண்ட ஆயுள் வளரும். மேலும் இதனால் உடலுக்குத் தேவையான வெப்பக்காற்று அதிகரித்து பித்தநீரை அதிகரிக்கச்செய்து உண்ட உணவுகள் எளிதில் சீரணமாகும். இதயத்திற்கு சீரான பிராணவாயு கிடைத்து இதயம் பலப்படும்.

வலது பக்கம் ஒருக்களித்து படுப்பதால் இடது பக்க மூக்கின் வழியாக சந்திரகலை சுவாசம் ஓடும். இதனால் பனிரெண்டு அங்குல சுவாசம் வெளியே செல்லும். இதனால் உடலில் குளிர்ச்சி உண்டாகும். இரவில் உண்ட உணவு சீரணமாகாமல் புளித்துப் போய் விஷமாக நேரிடும்

ரத்தத்திலுள்ள விஷத்தன்மை நீங்கும் சிறியா நங்கை, பெரியா நங்கை


சிறியா நங்கை, பெரியா நங்கை என இரண்டு வகை உண்டு. இதன் இலையை உண்டால், கடுமையான கசப்புத்தன்மை உள்ளதை உணரலாம். இம்மூலிகை, உடலுக்கு வலுவைத் தரும்; அழகைக் கொடுக்கும். நீரிழிவுக்கு அருமையான மருந்து. பாம்புக்கும் கீரிக்கும் சண்டை ஏற்பட்டு, பாம்பைக் கடித்துக் கொன்றபின் கீரிப்பிள்ளை இதன் செடியில் புரண்டு எழுந்து தமது புண்களை ஆற்றிக்கொள்ளும் என்பர். ‘சிறியா நங்கையைக் கண்டவுடன் சீறிய நாகம் கட்டழியும்’ என்பது பழமொழி. பாம்புக்கடி, நண்டுவாக்களி கடி முதலிய விஷக்கடிகளுக்கு இதன் இலையை அரைத்து விழுங்கச் சொல்வார்கள். அதனால் ரத்தத்திலுள்ள விஷத்தன்மை நீங்கும்.

கசப்பு மருந்து எனப்படும் சிறியாநங்கை, பெரியாநங்கை தாவரங்கள் மருத்துவகுணம் நிறைந்தவை. இவை செம்மண், கரிசல் மண்களில் நன்றாக வளரும். இது ஒரு குறுஞ்செடி. வேப்பிலை போன்று எதிர் அடுக்கில் வெட்டு இல்லாத இலைகளைக் கொண்டது. இதை விதைத்து 45 நாட்கள் ஆனதும் நாற்று எடுத்து நடலாம். ஆறு மாதம் கழித்து இலைகள் அறுவடை செய்து நிழலில் 5 நாட்கள் உலரவிட்டு பின் பொடி செய்து மருந்தாக உபயோகிப்பார்கள். ஆறு மாத்திற்கு மேல் வளர விட்டால் எள் பூ போன்று வெண்மையான பூ விடும். பின் 1.5 - 2 செ.மீ. நீள காய்கள் விடும். பின் காய்கள் காய்ந்தவுடன் வெடித்து விதைகள் சிதறிவிழும். இலை மென்று தின்றால் கசப்பாக இருக்கும்.

செயல்திறன்மிக்க வேதிப்பொருட்கள்

ஆன்டி ரோகிராப்பின் மற்றும் பனிக்கொலின் வேர்களிலும், இலைகளில் பீட்டா-சட்டோ ஸ்டீரால், 'கால்மேகின்' என்ற கசப்புப் பொருளும் உண்டு.

விஷக்கடிக்கு மருந்து

சிறியாநங்கையின் இலை மற்றும் வேர்ப் பகுதிகள் அனைத்தும் மருத்துவ குணம் கொண்டவை. வேட்டைக்கு செல்லும் வேடர்கள் சிறியாநங்கை செடியின் வடக்கத்திய வேரை காப்பு கட்டி எடுத்து கடை வாயில்வைத்து கடித்துக் கொண்டு செல்வார்கள் அவ்வாறு செல்லும்போது வேறு எந்த விஷப்பூச்சி கடித்தாலும் தாக்காது. தோல்நோய்களுக்கு சிறியா நங்கை மிகவும் நல்லது. ஆனால் பத்தியத்திற்கு கத்தரிக்காய் சாப்பிடக்கூடாது.

நீரிழிவு நோய்க்கு மருந்து

இது ஒரு ஆயுர்வேத மருந்தாகும். குழந்தைகளுக்கு மருந்து தயாரிக்க ஏற்றது. காய்ச்சல், பூச்சிக்கொல்லி, மலம் இளக்கி, படபடப்பு, வயிற்றுப் போக்கு போன்ற வற்றிக்கும், மண்ணீரல் சம்பந்தமான நோயிக்கும் நல்ல மருந்து. நீரிழிவு நோயிக்கும் சிறியாநங்கையைப் பயன்படுத்து கிறார்கள்.

கல்லீரல் நோய்களை போக்கும்

காய்ச்சல், கல்லீரல் நோய்களைப் போக்கும். மஞ்சள் காமாலை நோய்க்கு சிறந்த மருந்து. ப்ளுகாய்ச்சலை குணப்படுத்தும். சைனஸ் மற்றும் சளித்தொந்தரவினால் ஏற்பட்ட நோய்களை போக்கும். மலேரியாவிற்கு இது சிறந்த மருந்தாக செயல்படுகிறது. இது சிறந்த ரத்தசுத்திகரிப்பானாக பயன்படுகிறது. தமிழ்நாடு மற்றும் கேரளாவில் பாம்பு, தேள் உள்ளிட்ட விஷக்கடிகளுக்கு மருந்தாக பயன்படுகிறது.

பல நோய்களுக்கு நோய் நிவாரணி - தூதுவளை

Image result for தூதுவளை

பல நோய்களுக்கு நோய் நிவாரணியாக பயன்படுகிறது தூதுவளை
கோடி வகையைச் சேர்ந்தது இது. இலைகளின் பின்பக்கம் முள்கள் இருக்கும். தூது வளைக்கு கபநோய்களைத் தீர்க்கும் குணம் உண்டு. இருமல், பெருவயிறு, ஆண்மைக் குறைபாடு போன்றவற்றுக்கு தூதுவளை சிறந்த மருந்தாகும்.

நாட்டு வைத்தியத்திலும், சித்த வைத்தியத்திலும் தூதுவளை நன்கு பயன்படுகிறது இதன் மருத்துவகுணம் தெரிந்தவளைத் தவிர மற்றவர்கள் இதை உணவுப் பொருளாகக் கொள்ளமாட்டார்கள். இக்கீரையை கலவைக்கீரையோடு கலந்துதான் சமைப்பார்கள்

இதன் சுபாவம் உஷ்ணம், சூடு அதிகஉஷ்ணம் என்றும் சமைப்பதில்லை மெலும் இது சற்று கசக்கவும் செய்யும் இப்படி உஷ்ணம், கசப்பும் கொண்டதால் பெரும்பாலோர் இதைச் தொடுவதில்லை.

இதன் இலை, பூ, காய், கொடி அனைத்துமே மருத்துவ குணம் கொண்டது.


 

தூதுவளை உடல்நல நன்மைகள்:-
  • தூதுவளைக் கீரையைப் பூண்டு சேர்த்து அரைத்துச் சாப்பிட்டால் ரத்த ஓட்டம் சீராகும்.
  • தூதுவளைக் கீரையைக் காயவைத்துப் பொடியாக்கித் தினமும் சாப்பிட்டால் காது தொடர்பான நோய்கள் அனைத்தும் சரியாகும்.
  • தூதுவளைக் கீரையை நன்றாக அரைத்துச் சாறு எடுத்து மிளகுத் தூள் மற்றும் தேன் கலந்து குழந்தைகளுக்குக் கொடுத்தால் நன்றாகப் பசி எடுக்கும்.
  • தூதுவளைக் கீரைச் சாறை 30 மி.லி. அளவில் தினசரி காலையில் சாப்பிட்டு வந்தால், உடலில் இருக்கும் தேவையற்ற கொழுப்புகள் கரையும்.

  • தூதுவளையின் மருத்துவ குணங்கள் மிகவும் சக்தி வாய்ந்தது. இது சயரோகம், பிரைமரி காம்ளக்ஸ், ஆஸ்துமா, டான்சிலிட் டீஸ், தைராய்டு கட்டிகள், வாயில், கன்னத்தில் ஏற்படும் கட்டிகளுக்கும் காதில் ஏற்படும் எழுச்சிக் கட்டிக்கும் பயன்படுகிறது. சளியைக் கரைக்கும் தன்மைக்கு முதலிடம் பெறுகிறது. தைராய்டு கட்டிகள் தோன்றியவுடன் தூதுவளையைப் பயன்படுத்தினால் நிரந்தரத் தீர்வு காணலாம்.
  • தூதுவளை இலையை சேகரித்து சுத்தம் செய்து, பதினைந்து முதல் ஐம்பது கிராம் வரை எடுத்து, ஊற வைத்த அரிசி சேர்த்து அரைத்து ரொட்டியாகத் தயாரித்து காலை உணவாக மூன்று ரொட்டிக்குக் குறையாமல் இரண்டு மாதங்கள் சாப்பிட்டால், பூரண குணம் ஏற்படும். முதல் பதினைந்து தினங்கள் முதல் தொண்டைவலி குறைய ஆரம்பிக்கும். பிறகு படிப்படியாக நோய் நிவாரணம் அடையும்.
  • தூதுவளை இலை 15 கிராம் அளவில் சேகரித்து 500 மில்லி தண்ணீரில் போட்டு 200 மில்லியாக சுண்டக் காய்ச்சி வடிகட்டி 30 முதல் 40 மில்லி வரை ஒரு நாளைக்கு மூன்று வேளை இந்த கஷாயத்தைச் சாப்பிட்டு வந்தால், இருமல், இரைப்பு, சளியுடன் கூடிய காய்ச்சல், சயரோகக் காய்ச்சல் குணமாகும்.
  • இருபது கிராம் தூதுவளை இலையை நெய்யில் வதக்கி துவையலாகவோ, சட்னியாகவோ, பச்சடியாகவோ தயாரித்து பயன்படுத்தினால், மேற்கண்ட நோய்கள் குணமாகும். இப்படி தயாரித்த துவையலை சாப்பிடும்போது காலை, மதியம், இரவு நேர உணவுடன் சேர்த்துச் சாப்பிட்டால் நல்ல பலனை உடனே காண முடியும். இவ்வாறு வாரத்தில் இரண்டு தினங்களாவது சாப்பிட்டு வந்தால் நோய்த் தடுப்பாகவும், நோய் தீர்க்கவும் பயன்படும். இம்முறையில் பயன்படுத்தினால் நுரையீரல் நோய்கள் வராமல் நுரையீரல் பாதுகாக்கப்படும். ஆஸ்துமா, ஈசனோபீலியா நோய் வராமல் தடுப்பு மருந்தாகவும், வந்தபின் நோய் நீக்கவும் பயன்படுகிறது. தூதுவளையைப் பயன்படுத்துவதால் மூளை நரம்புகள் வலிமையடைகின்றன. இதனால் நினைவாற்றல் பெருக உதவியாக இருக்கிறது.
  • தூதுவிளங்காயைச் சேகரித்து மோரில் ஊற வைத்து வற்றலாகக் காயவைத்து வைத்துக் கொண்டு பனி மற்றும் மழைக்காலங்களில், எண்ணெயில் பொரித்து ஆகாரத்தில் சேர்த்துக் கொண்டால் ஆஸ்துமா நோய் தணியும். நுரையீரல் வலுவடையும்.
  • தூதுவளை இலையைப் பொடி செய்து வைத்துக் கொண்டு பயன்படுத்தலாம். இப்பொடியை உபயோகிப்பதால் சளி, இருமல் நீங்குகிறது. பசியை உண்டாக்குகிறது. ஆஸ்துமா நோயாளிகள் தொடர்ந்து பயன்படுத்திக் கொள்ளலாம். இப்பொடியை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், நீரிழிவு கட்டுப்படும். இப்பொடியுடன் திப்பிலிப் பொடியை சமமாக சேர்த்து தேனில் குழைத்துச் சாப்பிட்டால், இருமல் உடனே நின்று விடும்.
  • பசும்பாலில் இப்பொடியைச் சேர்த்து சாப்பிட்டால் பித்த நோயால் ஏற்படும் மயக்கம் தீரும். இப்பொடியை எருமை மோரில் கலந்து சாப்பிட்டால் இரத்த சோகை நீங்கி இரத்த விருத்தி உண்டாகும்.
  • தூதுவளை இலையை நெய்யில் வதக்கி, துவையல் செய்து வாரத்தில் இரண்டு நாளாவது பயன்படுத்தினால் வாயுவைக் கண்டிக்கும். உடல் வலிமை ஏற்படும். மூலரோகப் பிணிகள் குறையும். தாம்பத்ய உறவு மேம்படும்.
  • ஆஸ்துமா நோயாளிகள், காலை வேளையில் வெறும் வயிற்றில் தூதுவளைச்சாறு 50 மில்லியளவு சாப்பிட்டு வந்தால், ஆஸ்துமாவினால் ஏற்படும் சளி, இருமல் கபத்தைப் போக்கும்.
  • தூதுவளை இலைச்சாறு 100 மில்லி, பசு நெய் 30 மில்லி, இரண்டையும் சேர்த்து தூள் செய்த கோஸ்டம் 5 கிராம் சேர்த்து பதமாய்க் காய்ச்சி வைத்துக் கொண்டு, இதில் ஒரு தேக்கரண்டியளவு, தினம் இரண்டு வேளை சாப்பிட்டு வந்தால் சாதாரண இருமல் முதல் கக்குவான் இருமல் வரை குணமாகும். குழந்தைகளுக்கும் கொடுக்கலாம், பத்தியமில்லை.
  • தூதுவளையை அடிக்கடி பயன்படுத்தினால் புற்று நோய் வராமல் தடுக்கலாம். தொண்டைப் புற்று, கருப்பை புற்று, வாய்ப்புற்று ஆகிய வற்றிற்கு தூதுவளை மருந்து மிக்க நல்ல பலன் கொடுத்துள்ளது. ஆய்வு மூலம் தொண்டைப்புற்று, வாய்ப்புற்றுக்கு நல்ல மருந்தென நிரூபிக்கப்பட்டுள்ளது.
  • புகைப்பழக்கம், மதுப்பழக்கம் போன்ற பின் விளைவுகளான புற்றுநோய் எனக் கண்டறியப்பட்டால் ஆரம்ப நிலையிலே தூதுவளை இலையைப் பயன்படுத்தி, பூரண சுகாதாரத்தைச் சில மாதங்களிலே மீண்டும் பெற்று விடலாம்.
  • சித்த வைத்திய முறையில் தயாரிக்கப்படும் தூதுவளை நெய் பல நோய்களுக்கு நிவாரணமளிக்கிறது. தூதுவளை நெய்யை 1 முதல் இரண்டு தேக்கரண்டியளவு சாப்பிட்டால், எலும்புருக்கி நோய்கள், ஈளை இருமல், கபநோய்கள், மேக நோய்கள், வெப்பு நோய்கள், இரைப்பு, இளைப்பு இருமல் நோய்கள், வாய்வு, குண்டல வாயு முதலியன தீரும்.

சனி, 26 ஏப்ரல், 2014

நிலக்கடலை


Image result for ground nut


சோயாபீன்ஸிற்கு அடுத்து தரமான உயர்ந்த புரதம், வேர்க்கடலையில்தான் இருக்கிறது. முட்டையில் உள்ளதைவிட இரண்டரை மடங்கு அதிகமான புரதம் வேர்க்கடலையில் இருக்கிறது.மூளைச் சுறுசுறுப்பிற்கு உதவும் பாஸ்பரஸ், உப்பு, பற்கள் மற்றும் எலும்புகளின் பலத்திற்கு கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின் ஈ, நியாஸின் போன்ற வைட்டமின்களும் வேர்க்கடலையில் உள்ளன.

பெருந்தீனிக்காரர்களும், உடல் பருமன் உள்ளவர்களும், உணவைக் குறைத்து உடல் மெலிய விரும்பினால், சாப்பாட்டு நேரத்திற்கு ஒரு மணி நேரம் முன்பாக ஒரு கைப்பிடி அளவு வறுத்த வேர்கடலையைச் சாப்பிடவும். இத்துடன் சீனி சோக்காத காபி அல்லது டீ அருந்தவும். பிறகு ஒரு மணி நேரம் கழித்துச் சாப்பிட அமர்ந்தால், உணவை அதிக அளவில் சாப்பிட முடியாது. இதன் பொருட்டு உடல் எடையும் படிப்படியாகக் குறைய ஆரம்பிக்கும்.

வயிற்றுப்போக்கு உடனே கட்டுப்படவும், பற்கள் பலம் பெறவும் வேர்க்கடலை சாப்பிடுவது நல்லது. எல்லாவற்றையும்விட முக்கியமானது உடல் அழகும், இதயப் பாதுகாப்பும்.வேர்க்கடலையில் உள்ள நியாஸின், தோலில் உள்ள புண்கள், கொப்புளங்கள் ஆறவும், இவை வராமல் முன்கூட்டியே தடுப்பதுடன், பளபளப்பான தோலையும் ஏற்படுத்தித் தருகிறது.படிக்கும் மாணவ, மாணவியர் வேர்க்கடலையை தொடர்ந்து சாப்பிடுவதால் ஞாபக மறதி ஏற்படாது என்கிறார்கள், உணவு ஆய்வாளர்கள்.வேர்க்கடலையில் உள்ள உயிர்வேதிப்பொருட்கள் நரம்பு செல்களை நன்கு செயல்படத் தூண்டும். இதனால் நரம்பு மண்டலத்துடன் தொடர்புள்ள பார்க்கிஸன், அல்ஸமர் போன்ற ஞாபக மறதி நோய்கள் வராமல் தடுக்கும்.

மேலும், நரம்பு சம்பந்தமான நோய்களை வராமல் தடுக்கும் ஆற்றலும் வேர்க்கடலைக்கு உண்டு. வேர்க்கடலையில் 30 விதமான ஊட்டச் சத்துக்கள் உள்ளன. எல்லாவிதமான இரத்தப்போக்குகளையும் இது தடுக்கும். பெண்கள் மாதவிடாய்க் காலத்தில் சாப்பிட வேண்டிய உணவு வேர்கடலையாகும்.
இதில் புரதம் அதிகம். வேர்க்கடலையில் மேல் இருக்கும் தோலில் அதிக சத்துக்கள் உள்ளதால் அதனை நீக்காமல் சாப்பிடுவது அவசியம்.நாம் உண்ணும் உணவுப் பொருட்களில் இருந்து ரத்தத்தில் சேரும் சர்க்கரையின் அளவை `கிளை செமிக் இன்டெக்ஸ்’ என்பார்கள். இது வேர்க்கடலையில் மிகவும் குறைவு என்பதால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்காது.

மேலும், வேர்க்கடலையின் மேல் உள்ள பிங்க் கலர் தோலுக்கு நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் உண்டு.அதுமட்டுமின்றி, வேர்க்கடலையில் உள்ள மெக்னீசியத்திற்கு இன்சுலின் சுரக்கும் ஹார்மோன்களை துரிதப்படுத்தும் சக்தி உள்ளது.

கர்ப்பிணிகள் வேர்க்கடலையை சாப்பிடுவதால், அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு நரம்புக் கோளாறுகள் ஏற்படாது. வேர்க்கடலையில் கர்ப்பிணி பெண்களுக்கு மிகவும் அவசியமான வைட்டமின் ஏ மற்றும் நீரில் கரையக்கூடிய வைட்டமின் பி3 போன்றவை அதிகம் உள்ளன. ரத்த அழுத்தத்தை அதிகப்படுத்தும் சோடியம் வேர்க்கடலையில் குறைவு.

இதனால் வேர்க்கடை சாப்பிடுவதால் ரத்த அழுத்தம் அதிகரிக்காது. இதில் நார்ச்சத்து அதிகம் என்பதால் மலச்சிக்கல் ஏற்படாது. வேர்க்கடலையில் ஆன்டி ஆக்ஸிடென்ட்ஸ் இருப்பதால் உடலில் உள்ள தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றிவிடும். தினமும் 50 கிராம் வேர்க்கடலை அவித்து அல்லது வறுத்து சாப்பிடவும். எண்ணையில் பொரித்து சாப்பிட வேண்டாம்.

வேர்க்கடலையைப் பச்சையாகச் சாப்பிடுவதைவிட, வேர்க்கடலையை அவித்தோ, வறுத்தோ சாப்பிடலாம். ஆனால் வேர்க்கடலையை எண்ணெயில் போட்டு வறுத்துச் சாப்பிடக் கூடாது. வேர்க்கடலையின் தோலை நீக்காமல் சாப்பிட வேண்டும். ஏனென்றால் அதில்தான் நிறையச் சத்துகள் உள்ளன.ஒரு நாளைக்கு மாலை வேளைகளில் தின்கிற நொறுக்குத் தீனிகளுக்குப் பதிலாக 50 கிராம் வரை வேர்க்கடலை சாப்பிடலாம்.வேர்க்கடலையைச் சாப்பிடும்போது கசப்புச் சுவை வந்தால் அந்த வேர்க்கடலையைச் சாப்பிடக் கூடாது. கசப்பேறிய வேர்க்கடலையில் அஃப்லோடாக்ஸின் என்ற பொருள் இருக்கிறது. இது வயிற்றின் ஜீரணத்தைப் பாதிக்கக் கூடியது. எனவே புத்தம்புதிதான வேர்க்கடலையையே சாப்பிட வேண்டும்.

மீன் எண்ணெய்

மீன் எண்ணெய் என்றால் என்ன? எதற்கு சாப்பிட வேண்டும்? என்ன பலன்?

இந்த எண்ணெய் பெரியதாக இருக்கும் மீனான திமிங்கலம் போன்றவற்றிலிருந்து எடுக்கப்படும். இத்தகைய மீனை சமைத்து சாப்பிடமாட்டோம். ஆனால் இதில் இருந்து தான் வைட்டமின் மாத்திரைகள் தயாரிக்கப்படுகின்றன.

மீன் எண்ணெய் என்று கூறியதும், எண்ணெயை குடிக்க முடியாது, அதற்கு பதிலாக கடைகளில் மீன் எண்ணெய் மாத்திரைகள் விற்கப்படும். அதிலும் இந்த மாத்திரைகளை சாதாரண மெடிக்கலில் கேட்டாலே கிடைக்கும்.

எதற்கு சாப்பிட வேண்டும்?

இதனை சாப்பிடுவதால், இரத்தத்தில் இருக்கும் கொலஸ்ட்ராலின் அளவை ஸ்கேன் செய்யும். அதிலும் சிலசமயம் இரத்தத்தில் ட்ரைகிளிசரைடு என்னும் கொலஸ்ட்ரால் இருந்தால், அது இதயத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். ஆகவே இதை சாப்பிட்டால், இதில் உள்ள ஒமேகா ஃபேட்டி ஆசிட் அந்த ட்ரைகிளிசரைடை குறைத்துவிடும்.

எண்ணெய்களை குடித்தால், குண்டாவார்கள் என்று தான் தெரியும். ஆனால் இந்த எண்ணெயை சமையலில் பயன்படுத்தினால், உடல் அதிக எடை போடாமல் பார்த்துக் கொள்ளும்.

இந்த எண்ணெயை சாப்பிட்டால், மனம் சற்று ரிலாக்ஸ் ஆக இருக்கும். ஏனெனில் இதில் உள்ள EPA என்னும் நோய் எதிர்ப்புப் பொருள், மூளையை நன்கு சுறுசுறுப்போடு, எந்த ஒரு மன அழுத்தமும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளும்.

இந்த எண்ணெயில் உள்ள EPA, உடலில் ஏற்படும் மூட்டு வலிகளை சரிசெய்யும். மேலும் பெண்களுக்கு உடலில் கால்சியம் குறைபாட்டால் ஏற்படும் வலிகளை குறைக்கும். பெண்களின் இடுப்பு எலும்புகள் நன்கு வலுவடையும்.

ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த எண்ணெயை சாப்பிட்டால், எந்த ஒரு சுவாசக் கோளாறு பிரச்சனையும் ஏற்படாது.

இந்த எண்ணெயில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் இருப்பதால், புற்றுநோயை எதிர்த்துப் போராடும் தன்மை கொண்டது.

முக்கியமாக இந்த எண்ணெயை கர்ப்பமாக இருக்கும் பெண்கள் சாப்பிட்டால், வயிற்றில் உள்ள குழந்தைக்கு கண்பார்வை நன்கு தெரிவதோடு, மூளை வளர்ச்சியும் நன்கு இருக்கும்.

மேற்கூறியவாறு உடலுக்கு மட்டும் ஆரோக்கியத்தை தருவதோடு, சருமம் நன்கு மென்மையாக அழகாக பொலிவோடு இருப்பதோடு, கூந்தலும் பட்டுப் போன்று இருக்கும்.

புதன், 23 ஏப்ரல், 2014

பசியின்மை, குடல் பூச்சிகள்

குழந்தைகள் குடல் பகுதியில் அழுக்குகள் மற்றும் குடல் புழுக்கள் அதிகம் இருந்தால் குழந்தைகள் உடல் மெலிந்து காணப்படும். பசி எடுக்காது. ஆசன வாயிலில் குடைச்சல் அதிகம் இருக்கும். அதற்கு குப்பைமேனி வேர் 10 எடுத்து நன்கு சுத்தமாக தண்ணீரில் கழுவி, 2 டம்ளர் தண்ணீரில் போட்டு 1/2 டம்ளர் அளவுக்கு நன்கு கொதிக்க வைத்து ஆறிய பின்பு வடிகட்டி தண்ணீரை குழந்தைகள் குடித்தால், வயிற்றில் உள்ள புழுக்கள் செத்து மலம் கழிக்கும் போது வெள்ளையாக வெளியே வந்து விடும். வருடம் ஒருமுறை குடித்தால் போதுமானது.
           
   
 பெரியவர்கள் : 30 குப்பைமேனி 3 டம்ளர் தண்ணீரில் கலந்து 1/2 டம்ளர் அளவுக்கு நன்கு கொதிக்க வைத்து ஆறிய பின்பு தெளிந்த நீரை குடிக்கவும். வருடம் ஒருமுறை குடித்தால் போதுமானது.

திங்கள், 7 ஏப்ரல், 2014

வாழை இலையின் பயன்கள்



 இன்றைக்கு நாகரிகம் முன்னேறிவிட்டது என்று சொல்லி எத்தனையோ

பாரம்பரியமான விஷயங்களை, நம் முன்னோர்கள் அற்புதமாய் கண்டுபிடித்து வைத்திருக்கிற விஷயங்களை தவறவிட்டு விட்டோம்.
அதில் ஒன்றுதான் இந்த வாழை இலையில் சாப்பிடுவது. வாழை இலையில் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் உண்டாகின்றன? பார்ப்போம்…
முதலாவது வாழை ஒரு நல்ல நச்சு முறிப்பான் (Germ Killer) ஆகும்.
அதாவது நல்ல கிரிமிநாசினி என்றும் சொல்லலாம். சுடச்சுட பொங்கலையோ அல்லது சாதத்தையோ வாழையில் வைத்து சாப்பிடுவது மிகவும் நன்மை பயக்கும்.
தீக்காயம் பட்டவரை வாழை இலையில் கிடத்துவதை கண்டிருப்பீர்கள். வாலை இலை படுக்கையும், வாழைத்தண்டுச் சாறும், வாழைக்கிழங்கின் சாறும் நல்லதொரு நச்சு முறிப்பான்கள் ஆகும்.
இன்றைக்கும் கிராமங்களில் பாம்பு கடித்து விட்டால் முதலில் வாழைச்சாறு பருகக்கொடுப்பார்கள். நச்சு முறிந்துவிடும்.
காடும் காடு சார்ந்த பகுதிகளில் வாழ்ந்தவன்தான் தமிழன். எந்த வித நச்சும் முறிக்கப்படவேண்டும் என்பதற்காகத்தான் 4 பேர் கூடும் எந்த இடத்திலும் வாழைமரத்தை பயிரிட்டு தயாராக வைத்திருந்தான்.
ஆகவேதான் திருமணப் பந்தலிலும் வாழை மரம், இடுகாட்டுப் பாடையிலும் வாழை மரம், மக்கள் கூடும் எந்த திருவிழாக் கூட்டங்களிலும் வாழை மரம் என்று எங்கெங்கு காணினும் வாழை மரத்தை வைத்தான் நம் தமிழன். அதாவது நச்சு முறிப்புக்கு என்றுதான் அவ்வாறு செய்தான்.
இருட்டில் சமைக்க நேர்ந்து, சமைத்த உணவில் எதிர்பாராத விதமாக நச்சு கலந்திருந்தாலும், அல்லது வேறு எந்த வகையில் உண்ணும் உணவில் நச்சு கலந்திருந்தாலும் அதற்கான உடனடி நச்சு முறிப்பான் வாழை இலை மட்டுமே. அதனால்தான் வாழை இலையில் சாப்பாடு.
நாம் சாப்பிடும் தட்டை எவ்வளவு சுத்தப்படுத்துகிறோம்? தண்ணீர் விட்டு அல்லது வெந்நீர் விட்டு நன்றாக அலசி காயவைத்து எவ்வளவு சுகாதாரமாக பயன்படுத்துகிறோம்.
ஆனால் நமக்கும் நம்முடைய பிள்ளைகளுக்கு நோய்கள் வருகின்றன. ஆனால் வாழை இலை பயன்படுத்தி சாப்பிடுபவர்களுக்கு நோய்கள் வருவதில்லை. இதை என்றாவது யோசித்துப் பார்த்திருக்கிறீர்களா?
வாழை இலையில் தொடர்ந்து உணவு உட்கொண்டு வந்தால் தோல் பளபளப்பாகும். உடல் நலம் பெறும். மந்தம், வலிமைக்குறைவு, இளைப்பு போன்ற பாதிப்புகள் நீங்கும். அழல் எனப்படும் பித்தமும் தணியும்.
வாழையிலையின் மேல் உள்ள பச்சைத் தன்மை (குளோரோபில்) உணவை எளிதில் சீரணமடையச் செய்வதுடன் வயிற்றுப் புண்ணை ஆற்றும் தன்மை கொண்டது. நன்கு பசியைத் தூண்டும். வாழையிலையில் உண்பவர்கள் நோயின்றி நீண்ட ஆரோக்கியத்துடன் வாழ்வார்கள்.
அலுவலகம் செல்லும் அதிகாரிகள், பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் மதிய உணவை  எடுத்துச் செல்ல வாழை இலை சிறந்தது. சோறு பழுதாகாமல் அப்படியே இருக்கும் . குழந்தைகள், மாணவ, மாணவிகள் மதிய உணவு கொண்டு செல்ல வாழை இலை பயன்மிக்கது. கல்யாண வீடுகள், பொது விழாக்கள், அன்னதானம் விருந்து வைபவங்களுக்கு உணவு பரிமாறுவதுக்கு வாழை இலைகள் தான் பெரிதும் பயன்படுகின்றன.
வாழைமரத்தில் இருந்து நாம் பல பயன்களை பெற்று வருகின்றோம். அதில் வாழை இலையின் பயன்பாடும் முக்கியம். வாழை இலையின் பயன்பாட்டை அறிந்து கொள்ளுங்கள்

கூந்தல் வளர்ச்சிக்கு உதவும் சத்துக்கள்

மென்மையான பளபளப்பான கூந்தல் பெற வேண்டும் என்பதே, அனைவரின் விருப்பமாக இருக்கும். கூந்தல் வளர்ச்சியை ஊக்கப்படுத்த, புரதச்சத்து, மாவு சத்து, ஊட்டச்சத்துகள் மற்றும் தாது சத்துக்கள் ஆகியவை அவசியம். கூந்தல் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும் அமினோ அமிலங்கள், புரதச்சத்தில் காணப்படுகின்றன.
நம் உடலில் காணப்படும் புரதச்சத்து பற்றாக்குறையால் கூந்தல் உதிர்தல் மற்றும் வளர்ச்சி குறைதல் போன்ற பிரச்னைகள் ஏற்படும். எனவே, கூந்தல் வளர்ச்சி நன்றாக இருக்க வேண்டும் என விரும்புபவர்கள், புரதச்சத்து நிறைந்த உணவு வகைகளான மீன், முட்டை, பால் பொருட்கள், சோயா, பருப்பு வகைகள் ஆகியவற்றை சாப்பிடலாம்.
* கூந்தல் உட்பட உடலின் அனைத்து திசுக்களின் வளர்ச்சிக்கும் மாவு சத்துகள் முக்கியப் பங்கு வகிக்கிறது. எனவே, மாவு சத்து அதிகம் நிறைந்த, ஓட்ஸ், சிவப்பு அரிசி, கோதுமை, பார்லி ஆகியவற்றை உணவில் சேர்த்துக் கொள்வதால் ஆரோக்கியமான கூந்தலை பெறலாம்.
* உடலுக்கு நல்ல கொழுப்பு சத்து தேவை. இவை, கூந்தல் வறண்டு போதல், கடினமாதல் மற்றும் பொடுகு ஏற்படுதல் ஆகியவற்றை தடுக்கிறது.எண்ணெய் தன்மை உள்ள மீன்கள், பருப்பு வகைகள், ஆலிவ், சூரிய காந்தி எண்ணெய் ஆகியவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். உணவின் மூலம் உடலுக்கு தேவையான நல்ல கொழுப்பு சத்து கிடைக்கவில்லை என்றால் மருத்துவ ஆலோசனை பெறலாம்.
* மீன், இறைச்சி, வெண்ணெய், முட்டை, புரோக்கோலி, முட்டைகோஸ், கேரட் மற்றும் ஏப்ரிகாட் ஆகியவற்றில் காணப்படும், “வைட்டமின் ஏ’ மற்றும் பீட்டா கரோட்டின் ஆகியவை தலையில் தேவையான எண்ணெய் சுரப்பதை உறுதிசெய்து, தலை போதிய ஈரத்தன்மையுடன் இருக்க உதவுகிறது.
* நெல்லிக்காய், கொய்யா, ஸ்ட்ராபெர்ரி, அன்னாசி, தக்காளி, குடைமிளகாய் மற்றும் கீரை வகைகள் ஆகியவற்றில் நிறைந்துள்ள “வைட்டமின் சி’ சத்து, கூந்தலின் ஆரோக்கியத்தை பராமரித்து, கூந்தலின் நுனியில் பிளவு ஏற்படுவதை தடுக்கிறது.

*ஆலிவ் ஆயில், சோயாபீன்ஸ், பச்சைக் காய்கறிகள் ஆகியவற்றில் காணப்படும் வைட்டமின் சி சத்து, தலையில் ரத்த ஓட்டத்தை அதிகரித்து வறண்ட கூந்தலுக்கு ஊட்டமளிக்கிறது.
கூந்தலின் நெகிழ்வு தன்மைக்கு, ஈரப்பதம் முக்கியப் பங்கு வகிக்கிறது. எனவே, கூந்தலின் வறண்ட தன்மை நீங்க, தினமும், 1.5 லிட்டர் முதல் 2 லிட்டர் வரையிலான தண்ணீர் குடிக்க வேண்டும்.

தூக்கம் மிக முக்கியம்

ஓர் இரவு முழுவதும் உங்களால் தூங்காமல் இருக்க முடியுமா? வாய்ப்பே இல்லை அதற்கு என்றுதான் நிறைய பேர் கூறுவார்கள். ஆனால், உலகில் 7  முதல் 18 சதவீதம் பேர் தூங்க முடியாமல் தவிப்பதாகவும் இவர்களில் 3 முதல் 13 சதவீதம் பேர் தூக்கம் மற்றும் மன அமைதிக்கான  மாத்திரைகளை உட்கொண்டால்தான் உறங்க முடிகிறது என்றும் அறிவிக்கிறது மருத்துவ ஆய்வு.
ஒரு நாளில் 7 முதல் 10 மணி நேரம் தூங்கினால், உடல் நல்ல நிலையில் இருக்கிறது என்று அர்த்தம். அது குறைந்தாலோ, கூடினாலோ ஏதோ ஒரு  நோய்க்கான அறிகுறியாக இது இருக்கலாம் என்பதை உணர்ந்து உடனே மருத்துவரை சந்திப்பது நல்லது.
குழந்தைகள் அதிகம் தூங்குவதையோ,  முதியவர்கள் மிகக்குறைவாக தூங்குவதையோ பிரச்னையாக கருதத் தேவையில்லை.
குழந்தைகள் 16 மணி நேரம் வரை கூட உறங்குவார்கள். முதியவர்கள் 4 மணி நேரம் ஆழ்ந்து தூங்கினாலே, அது அவர்கள் வயதுக்கு நல்ல  தூக்கம்தான்.

மண்பானை சமையல் ஆரோக்கியமானது

மண்பானைகள் பல  நூற்றாண்டுகளாக ஆரோக்கிய சமையலுக்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றன. மண்பானையில் சமைப்பது பாரம்பரியமாக தமிழகத்தில் உள்ள வழக்கம். ஆனால், இன்று மண்பானையில் சமைக்கும் பழக்கம் குறைவிட்டது என்றே சொல்ல வேண்டும். இப்போது சந்தையில் தினம்தோறும் புதிது புதிதாக பல வகை உலோக பாத்திரங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. மண்பானையில் சமைப்பதனால் ஏற்படும் நன்மைகளை சற்றுக் கண்போம் வாரிர்.
மண்பானைகளில் சமைக்கும் போது உணவின் மீது வெப்பம் சீராக, மெதுவாக பரவுகிறது. இது உணவை சரியான முறையில் சமைக்க உதவுகிறது.  மேலும் மண்பானைகளில் உள்ள நுண்துளைகள் மூலம் நீராவி, காற்று உணவில் ஒரே சீராக ஊடுருவி உணவை சமைக்க உதவுகிறது. இதனால் மண்  பானைகளில் சமைக்கும் உணவு ஆவியில் வேக வைத்த உணவைப்போன்ற தன்மையை பெறுகிறது. இது உடல் நலனுக்கு உகந்தது. இதனால்  உணவில் உள்ள சத்துகள் பாதுகாக்கப்பட்டு, எளிதில் செரிமானமாகும் தரமான உணவு கிடைக்கிறது.
மண் பாத்திரங்கள் உணவில் உள்ள அமிலத்தன்மையை சமப்படுத்தும் தன்மை கொண்டவை. உப்பு, புளிப்பு சுவையுடைய உணவுகள் சமைக்கும் போது,  மண்பானை தீங்கான விளைவுகள் எதையும் ஏற்படுத்துவதில்லை. ஆனால் உலோக பாத்திரங்கள் உணவுடன் வினைபுரியும் நிலை உள்ளது.  மண்பானையில் சமைக்கும் போது, அதிக எண்ணெய் பயன்படுத்தவும் தேவையில்லை. எனவே மண்பானையில் சமைக்கும் உணவு மிகவும் ஆரோக்கிய மானதாகும்.

ஆஸ்துமாவிற்கு மருந்தாகும் மிளகு!

ஆஸ்துமா நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் எத்தனையோ வைத்தியம் செய்தும் குணமாகவில்லை என்று கவலைபடுவோறுக்கு இது நல்ல செய்தியாகும். அதாவது, ஆஸ்துமா நோயுற்றவர்களுக்கு மிளகு ஒரு அருமருந்தாக அமைகிறது.
மிளகு, கிராம்பு மற்றும் எருக்கம்பூ ஆகிய மூன்றையும் சம அளவு எடுத்து மை போல அரைத்து, மிளகு அளவிற்கு சிறு சிறு மாத்திரைகளாக உருட்டி நிழலில் உலர்த்திக் கொள்ளவும்.
இதில் ஒரு மாத்திரை வீதம் இரு வேளை வெந்நீரில் சாப்பிட்டு வர ஆஸ்துமா, இருமல், சளி,  ஆகியவை குணமாகும்.
இதேப்போல, ஆஸ்துமா நோயினால் மூச்சு விட சிரமப் படும்போது ஒரு பழுத்த வாழைப்பழத்தை அனலில் வேக வைத்து, மிளகுத்தூளில் தொட்டு உட்கொள்ள உரிய நிவாரணம் பெறலாம்.

முலிகை - ஓமம் மருத்துவ குணங்கள்



சிலர் எவ்வளவு சாப்பிட்டாலும் உடல் தேறமாட்டார்கள். இன்னும் சிலர் பார்க்க பலசாலி போல் தோற்றமளிப்பார்கள். ஆனால் மாடிப்படி ஏறி இறங்கினாலோ அல்லது சிறிய பொருளை தூக்கினாலோ உடனே சோர்ந்து போவார்கள்.

இவர்கள் ஓமத்தை நீரில் கொதிக்க வைத்து அதனுடன் பனை வெல்லம் சேர்த்து காலை வேளையில் அருந்தி வந்தால் உடல் பலம்பெறும்.

வயிறுப் பொருமல் நீங்க
சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வயிற்றுப் பொருமல், வயிற்று வலி, அஜீரணக் கோளாறு உள்ளவர்கள் 100 கிராம் ஓமத்தை
1 லிட்டர் தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து அது பாதியாக வந்தவுடன் எடுத்து அருந்தினால் மேற்கண்ட அனைத்தும் தீரும்.

ஓமம், மிளகு வகைக்கு 35 கிராம் எடுத்து நன்கு இடித்து பொடியாக்கி அதனுடன் 35 கிராம் பனைவெல்லம் சேர்த்து அரைத்து காலை, மாலை என இருவேளையும் 5 கிராம் அளவு எடுத்து சாப்பிட்டு வந்தால் பொருமல், கழிச்சல், வயிற்றுக் கடுப்பு நீங்கும்.

புகைச்சல் இருமல் நீங்க

சிலருக்கு தொண்டையில் புகைச்சல் ஏற்பட்டு இருமல் வரும். இவர்கள் ஓமம், கடுக்காய் தோல், முக்கடுகு, சித்தரத்தை, அக்கிரகாரம், திப்பிலி வேர் இவைகளின் பொடியை சம அளவு எடுத்து அதனுடன் சரிபாதி பனங்கற்கண்டு சேர்த்து காலை, மாலை கொடுத்து வந்தால் தொண்டை புகைச்சல் மற்றும் இருமல் நீங்கும் .

மந்தம்
பொதுவாக மந்தமானது சிறு குழந்தைகளுக்குத்தான் ஏற்படும். மந்தம் இருந்தால் உடல் சோர்வுற்று, அஜீரணக் கோளாறு உண்டாகும். இத்தகைய மந்தத்தைப் போக்க ஓமம், சுக்கு, சித்திரமூல வேர்ப்பட்டை, இம்மூன்றும் சமபங்கு எடுத்து ஒன்றாக சேர்த்து பொடித்து அதனுடன் கடுக்காய் பொடி சேர்த்து அதில் சிறிதளவு எடுத்து மோரில் கலந்து கொடுத்தால் மந்தம் நீங்கும்.

பசியைத் தூண்ட
நல்ல தூக்கமும், நல்ல பசியும் தான் ஆரோக்கிய மனிதனுக்கு அடையாளம். இந்த பசியும், தூக்கமும் பறந்துபோனால் நோய்களின் கூடாரமாக உடல் மாறி, அதனால் மனமும் பாதிக்கப்படும்.

பசியைத் தூண்டி உண்ட உணவு எளிதில் சீரணமாகவும், வயிறு தொடர்பான அனைத்து பிரச்சனைகள் தீரவும், ஓமத்தை கஷாயமாக்கி அருந்திவருவது நல்லது.

சுவாசகாசம், இருமல் நீங்க

காற்றும், நீரும் சுகாதாரமாகவும், சுத்தமாகவும் இருந்தால்தான் மனித இனம் உயிர்வாழ முடியும். தற்போதைய காலகட்டத்தில் காற்றும், நீரும் சுகாதாரம் என்பது கேள்விக்குறியாகி விட்டது. இந்த அசுத்தமடைந்த காற்று, நீரால் சுவாசகாசம், இருமல் போன்ற நோய்கள் ஏற்படுகின்றன.
இவற்றை சீர்படுத்த ஓமம் சிறந்த மருந்தாகும்.
1. மேலும் குடலிரைச்சல், இரைப்பு, பல்நோய் இவற்றிற்கும் ஓமம் சிறந்த மருந்தாகும்.
2. ஓமத்திராவகம் என்ற மாபெரும் மருந்து ஆதிகாலம் தொட்டு இன்றுவரை இருந்து வருகிறது. குழந்தைகளின் சர்வரோக நிவாரணியே ஓமத் திராவகம்தான்.
3. ஓமத்திராவகம் வீட்டில் இருந்தால் சிறு குழந்தை முதல் பெரியவர்கள் வரை வயிறு உபாதையின்றி வாழலாம்.
4. ஓமத்தை பொடித்து உச்சந்தலையில் வைத்து தேய்த்தால் ஜலதோஷம் குறையும்.
5. ஓமப்பொடியை துணியில் கட்டி நுகர்ந்தால் மூக்கடைப்பு நீங்கும்.
6. சோர்வு நீங்க ஓமத்தண்­ர்

நம் தினசரி உணவில் ஓமத்தைச் சேர்த்துக் கொள்வது வழக்கம். காரக் குழம்பா? ஓமம் வறுத்துப்போடுவோம். மோர்க் குழம்பா? தேங்காயுடன் ஓமத்தை அரைத்துக் போடுவோம்.

ஓமத்தில் சூப் வைத்துக் குடித்தால் உடல் சோர்வு, நீங்கி சுறுசுறுப்பாகி விடுவோம். ஓம ரசம் செய்து, சூடான சாதத்தில் ஊற்றி, ஒரு சொட்டு நெய், ஊற்றி, உப்பில் ஊற வைத்த நார்த்தங்காயைத் தொட்டுக் கொண்டு சாப்பிடுவது ஆண்டாண்டு காலமாய் பின்பற்றப்பட்டு வரும் பழக்கம். காய்ச்ச்ல் கண்டவர்களுக்கு இது தான் சாப்பாடு.
7. வயிற்றுக் கோளாறுக்கு ஓமம் தான் சிறந்த மருந்து.
8. தினமும் ஓமத் தண்ணீர் குடித்தால் ஆஸ்துமா நோய் வரவே வராது.
9. ஓமத்தை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம்?

அரை டீஸ்பூன் ஓமத்தை ஒரு லிட்டர் தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைத்துக்குடித்தால் ஆஸ்துமா அண்டாது. வயிற்றில் செரிமானம் சீராகும்.
வயிற்று வலி ஏற்பட்டால், ஐந்து கிராம் ஓமத்துடன் சிறிது உப்பு, பெருங்காயம் சேர்த்துப் பொடித்து தேனில் குழைத்துச் சாப்பிட்டால் சிறிது நேரத்தில் வயிறு லேசாகி விடும்.
நாட்டு மருந்து கடைகளில் ஓம எண்ணெய் கிடைக்கும். மூட்டு வலிக்கு இதைத் தடவினால் நாளடைவில் மூட்டி வலிக்கு குணமாகும்.
மார்ச்சளி இருந்தால், ஓம எண்ணெயை மார்பின் மீது தடவுவதை கிராமங்களில் இன்றும் காணலாம்
பல்வலி இருந்தால், இந்த எண்ணெயைப் பஞ்சில்தோய்த்து பல் மீது வைத்து அழுத்திக் கொண்டால் பல் வலி மறையும்.
வயிறு "கடமுடா" வென சத்தம் போட்டால், ஓம எண்ணெயை வயிற்றின் மீது தடவலாம்.
ஓமப் பொடி சிறிது, உப்பு சிறிது ஆகியவற்றை மோரில் கலந்து குடித்தால், நெஞ்சில் பிடித்துள்ள சளி வெளியேறும்.
சுறுசுறுப்பின்றி சோம்பலாய் உட்கார்ந்திருப்பவர்கள் சிறிது ஓமத் தண்ணீர் குடித்தால், சோர்வு பயந்து ஓடி விடும்!.

தொப்பையை குறைக்க

தினமும் இரவில் தூங்க போகும் போது அன்னாச்சிப்பழம் நான்கு துண்டுகள் மற்றும் ஓமம் பொடி இரண்டு ஸ்புன் இவை இரண்டையும் தண்ணீரில் விட்டு கொதிக்க விட வேண்டும் அவை நன்கு வெந்தவுடன் அதை அப்படியே மூடிவைத்துவிட வேண்டும்.காலை 5 மணிக்கு எழுந்து அதனை நன்காக கரைத்து குடிக்க வேண்டும்.இவ்வாறு 15 நாட்கள் செய்து வந்தால் உங்களுக்குள் உள்ள தொப்பை காணாமல் போய்விடும்.

 ஓமம், சீரகம் கலவை வய்ற்றுக்கு மருந்து"

" ஓமம், சீரகம் கலவை " வயிற்றுக் கோளாறு, அஜீரணம் போன்ற உபாதைகளுக்கு நல்ல மருந்து. " ஜெலூசில் " போன்ற ந்யூட்ரலலைசர் தேவைப்படாது. பக்க்க விளைவுகளும் கிடையாது.
செய்முறை :

ஓமம், சீரகம் சம அளவு சேர்த்து, வாணலியில் கருகாமல் வறுத்து, சிட்டிகை உப்பு சேர்த்து 'மிக்சியில்' போட்டு அரைத்து வைத்துக் கொள்ளலாம். சாப்பிட்ட 20 நிமிடங்களுக்குப் பிறகு, ஒரு தேக்கரண்டி, குவியலாக, சாப்பிடலாம்.

மந்த வயிற்றுக்கான அறிகுரி கண்டால் உட்கொள்ளலாம். தற்காப்பக "கல்யாண சமையல் சாதம் " சாப்பிட்ட பிறகும் சாப்பிடலாம். வயிற்றுக் கடுப்புப் புறங்காட்டி ஓடும் !

 இடுப்பு வலி நீங்க:

சிறிது தண்ணீரில் ஒரு கரண்டி ஓமம் போட்டு கொதிக்க வைத்து, அதில் 100 மில்லி தேங்காய் எண்ணெயை விட்டு மீண்டும் கொதிக்க விட்டு வடிகட்டி கொள்ளுங்கள். வடிகட்டியதோடு கற்பூரப் பொடியைக் கலந்து இளஞ்சூட்டுடன் இடுப்பில் நன்றாகத் தேய்த்து வர இடுப்பு வலி நீங்கும்.

இனியும் தாமதியாமல் ஓமம் என்னும் அருமருந்தை பயன்படுத்தி உங்கள் குழந்தைகளையும், உங்களையும் ஆரோக்கியமானவராக மாற்றி நீண்ட ஆயுளோடு இனிதே வாழுங்கள்.