வெள்ளி, 13 மார்ச், 2015

மூக்கின் வழியே இரத்தம்





மூக்கின் வழியே இரத்தப்போக்கு எற்படுவது குழந்தை பருவத்தில் மிகவும் பொதுவான நிகழ்ச்சி. பெரும்பாலான இந்த வகை இரத்தபோக்கு, மிதமாக இருப்பதனால் சிறிது நேரத்தில் தானாகவே நின்று விடுகிறது.எனினும், வயதானவர்களுக்கும், இரத்தத்தில் உள்ள குறைபாடுகள் போன்ற தீவிரமான காரணங்களினால் ஏற்படும் இரத்தபோக்கு கடுமையாகவும், கட்டுப்படுத்த கடினமாகவும் இருப்பதுண்டு.
மூக்கின் வழியே ஏற்படும் இரத்தப்போக்கு அதிகமாக இருந்தாலோ, இருபது நிமிடங்களுக்கும் மேலாக நிற்காமல் தொடர்ந்து கொண்டிருந்தாலோ மருத்துவரிடம் கொண்டு செல்வது அவசியமாகிவிடுகிறது.
காரணங்கள்:
பெரும்பாலான இரத்தபோக்கு மூக்கின் துவாரத்தின் மிக அருகில் உள்ள பகுதிகளில் இருந்து ஏற்படுகிறது. இந்த பகுதியில், அடர்த்தியான நுண்ணிய இரத்த நாளங்கள் பல இருப்பதால், அவை எந்தவகையிலாவது காயப்படும்பொழுது, எளிதில் கிழிபட்டு இரத்தம் வடிய நேர்கிறது. அவ்வாறு கிழிபட காரணங்களாக இருப்பவை ,
1 .மூக்கில் விரல் விடுவது.
2 . குளிர் காலங்களில் மூக்கின் உட்பகுதி காய்ந்து பொருக்கு தட்டி இருப்பது.
3 . மூக்கை கடுமையாக சிந்துவது
4 . பிற காரணங்களினால் ஏற்படும் காயங்கள்- சைனஸ் அழற்சி, சுவாசக் குழாய் நோய்தொற்று போன்றவை.
மேற்கொண்ட காரணங்களினால் ஏற்படும் இரத்தபோக்கு பொதுவாக மிதமாகத்தான் இருக்கும்.
இவற்றை தவிர, இரத்தத்தில் உள்ள குறைபாடுகள், இரத்தத்தை இளக்கும் வார்பாரின், ஆஸ்பிரின் போன்ற மருந்துகளை உட்கொள்ளுதல், இருதய கோளாறுகள், ஒவ்வாமை, மூக்கிலோ, இரத்ததிலோ புற்றுநோய் போன்ற காரணங்களினால் ஏற்படும் இரத்தபோக்கு கடுமையானதாக இருப்பதுண்டு.
சில சமயங்களில் மூக்கின் பின்பகுத்தியிலிருந்து ரத்தப்போக்கு ஏற்படுவதுண்டு, இது பெரும்பாலும் மூக்கிலோ, முகத்திலோ கடுமையாக அடிபடுவதினால் ஏற்படுகிறது.
மூக்கின் வழியே இரத்தம் வடியும்பொழுது என்ன செய்ய வேண்டும்?
பெரும்பாலான இரத்தப்போக்கு கீழ்கண்டவற்றை செய்வதினால் நின்று விடும்.
1 . தலைசுற்றலோ, மயக்கமோ இல்லாத பட்சத்தில், சிறிது முன்பக்கம் சாய்ந்தவாறு அமர வேண்டும்.
2 . கட்டை விரலையும், இன்னொரு விரலையும் பயன்படுத்தி மூக்கின் கீழ்பகுதியை , மூக்கின் துவாரம் முழுவதுமாக அடைபடும்படி அழுந்த பிடிக்கவேண்டும். இவ்வாறு செய்வதால், மூக்கின் கீழ்பகுதியில் உள்ள ரத்த  நாளங்கள் அழுத்தப்பட்டு  இரத்தக் கசிவு நின்றுவிடுகிறது.
3 . வாயில் கூடும் எச்சிலையும், இரத்தத்தையும் துப்பி விடவும்.
4 . இரத்த கசிவு முழுவதும் நின்ற உடன், மூக்கை சிந்துவதையோ, மூக்கில் விரல் விடுவதையோ தவிர்க்கவும். அப்படி செய்தால், அது மீண்டும் இரத்தபோக்கை ஏற்படுத்தி விடும்.

மருத்துவமனை போகவேண்டியது எப்போது?
இரத்தப்போக்கு கடுமையாக இருந்தாலோ, இருபது நிமிடங்களுக்கு மேல் நிற்காமல் வடிந்து கொண்டிருந்தாலோ, மயக்கம், படபடப்பு ஏற்பட்டாலோ,தீவிரமான பிற காரணங்களினால் இரத்தப்போக்கு ஏற்பட்டாலோ மருத்துவமனை செல்லவேண்டும்.
மருத்துவர் என்ன செய்வார்?
சாதாரண முதலுதவியினால் நிற்காத இரத்தபோக்கை நிற்க வைக்க பல்வேறு செய்முறைகள் கடைபிடிக்க படுகிறது. இரத்த நாளங்களை வெள்ளி நைட்ரேட் என்ற வேதியல் பொருளை கொண்டோ, மின்சாரத்தை கொண்டோ பொசுக்கி இரத்த கசிவை நிறுத்துவது, பேக்கிங் எனப்படும்  பஞ்சு உருண்டைகளை அழுந்த அடுக்குவது,  நேரடியாக இரத்த நாளங்களை கட்டி விடுவது போன்ற செய்முறைகள் தேவைக்கேற்ப கடைபிடிக்க படுகிறது. மற்ற காரணங்களினால் இரத்தப்போக்கு ஏற்படும் பட்சத்தில் அதற்கு ஏற்ற சிகிச்சை செய்யப்படும். தேவைபட்டால் இரத்தமும்  ஏற்றப் படும்.
மீண்டும் மீண்டும் மூக்கில் இரத்தம் வடிவது:
சிலருக்கு மூக்கில் இரத்தபோக்கு மீண்டும், மீண்டும் ஏற்படுவதுண்டு. பெரும்பாலும், மிதமாகவும், எளிதில் நின்றுவிடக்கூடியதாக இருந்தாலும்,  தினப்படி வாழ்கையை அசௌகரியப்படுத்தும் பட்சத்தில், மருத்துவரை அணுகலாம். காட்டறி எனப்படும், இரத்த நாளங்களை பொசுக்கும் செய்முறையின் மூலம் இந்த பிரச்சனைக்கு சிகிச்சை செய்யப்படும்.

பொதுவாக மிதமானதாக இருக்கும் மூக்கின் வழியே ஏற்படும் இரத்தப்போக்கு, அரிதான சமயங்களில் (கடுமையாக , தொடர்ச்சியாக  இருக்கும்போது) ஆபத்தாகக் கூடும்.  மூக்கில் இரத்தம் வடியும்போது அதை பதற்றமில்லாமல் கையாளத்தெரிவதும், ஆபத்தை அடையாளம் கண்டு பிடிக்க தெரிவதும் அவசியம்.






--
R.Madhavan
9790791445




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக