ஞாயிறு, 18 மே, 2014

கருஞ் சீரகம் பயன்கள்


கருஞ் சீரகம்
ஆயுர்வேதம், யுனானி மருந்துவங் களில் பயன்படும் கருஞ்சீரகம் ஒரு தொன்மையான உணவுப் பொருள். பைபிளில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. மேற்கத்திய வைத்தியத்தின் தந்தையான ஹிப்போ கிராடிஸ் (Hippocrates) மற்றும் டியோஸ் கோரைடீஸ் (Dioscoridess) பிளினி (Pliny) இவர்களாலும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

தாவரவியல்
1. தாவிரவியல் பெயர் - Nigella Sativa Linn.
 2. சம்ஸ்கிருத பெயர்கள் - உபகுஞ்சிகா, கிருஷ்ண ஜீரகா, குஞ்சிகா, உபகுஞ்சீரகா,
3. ஆங்கிலம் - - Black Cumin, Nutmeg flower, Small Fennel
4. இந்தி - காலாஜீரா, கலோன்ஜி
தாவர விவரங்கள்
அழகான செடி, 30லிருந்து 60செ.மீ உயரம் வளரும். இலைகள்: ஈட்டி போல் குவிந்த அமைப்பு, 2.5லிருந்து 5செ.மீ. நீளமுடையவை. பூக்கள்: 2 லிருந்து 2.5 செ.மீ குறுக்களவு, ஒரு தனி நீண்ட காம்பில் (மஞ்சள் தண்டு), வெளி இதழ் கோள வடிவு, தேன்(மது) உடையவை. சூலுறைகள் 5 (அ) 7, உப்பியவை, விதைகள்: மூன்று மூலை வடிவம், கருநிறம்
கருஞ்சீரகச்செடி காட்டுச்செடியாகவும் வளரும் விவசாயத்தில் களையாகவும் காணப்படும்.
பயன்படும் பாகம்:  விதைகள்
பயிராகும் விவரங்கள்: இந்தியாவில் ஏறக்குறைய எல்லா இடங்களிலும் பயிராகும். உலர்ந்த மண் கருஞ்சீரகம் பயிரிட ஏற்றது. விதைகள் 24 மணி நேரம் நீரில் நனைக்கப்படும். 10 (அ) 15 நாட்கள் விதைகள் முளைத்துவிடும். முளைத்து, உப்பி, உடைத்து, முளை வேர் பூமியில் நுழையும். 2 (அ) 3 செ.மீ வளர்ந்தவுடன் இலைகள் தோன்றும்.
விதைகளின் தன்மை கசப்பு சுவை, வாசனையுடையது.
செயல்பாடு - வாய்வகற்றி (Carminative), சிறுநீர் பெருக்கி, பெண்களில் மாதவிடாய் உண்டாக்கும், தாய்ப்பால் சுரக்க தூண்டும், கிருமி, பூச்சி, நாசினி, பசியை தூண்டும்.
பயன்கள்
•  கருஞ் சீரகத்தை நல்லெண்ணையில் அரைத்து, சரும நோய்களான கரப்பான், சிரங்கு, இவற்றுக்கு பூச, நல்ல நிவாரணம் கிடைக்கும். சினைப்பு, கட்டிகள் கொப்பளங்கள் - இவற்றுக்கும் நல்ல மருந்து.
• இதிலிருந்து எடுக்கப்படும் எண்ணை பாக்டீரியாக்களை அழிக்கும். Micrococcus Pyrogenes, Escherichia Coli இவற்றை நீக்கும்.
• லேசான ஜூரங்களுக்கு நல்ல மருந்து. தலைவலி, கீல் வீக்கம் இவற்றுக்கு விதைகளை வெந்நீரில் இட்டு அரைத்து பூசலாம்.
• இதன் பொடியை தேன் (அ) நீரில் கரைத்துக் கொடுக்க மூச்சு முட்டல் நீங்கும். மோரில் சேர்த்து கொடுத்தால் விக்கல் நிற்கும்.
• ஆயுர்வேத ஆசான் சுஸ்ருதர், இதன் விதைகளை மற்ற மருந்துகளுடன் சேர்த்து, பாம்பு, தேள்கடிகளுக்கு பயன்படுத்தலாம் என்கிறார்.
• யுனானி மருத்துவத்தில், நுரையீரல் கோளாறுகள், இருமல், காமாலை, கண்நோய்கள், ஜூரம், மகளிரை பூப்படைய செய்வதற்கு முதலியவற்றுக்கு, கருஞ்சீரகம் பயன்படுத்தப்படுகிறது.
• சித்த வைத்திய பாடல் ஒன்று சொல்வது "கருஞ்சீரகத்தான் கரப்பனோடு புண்ணும்  வருஞ்சிராய் பீநசமு மாற்றும் - அருந்தினால் காய்ச்சல் தலைவலியுங் கண் வலியும் போமுலகில்
வாய்ச்ச மருந்தெனவே வை”
• குடல் புழுக்களையும் கருஞ்சீரகம் நீக்கும்.
• இதன் பொடியை வைத்தியரின் அறிவுரைப்படி 3 (அ) 7 நாட்கள் உபயோகிக்க வெறிநாய் கடியின் நஞ்சு தீரும்.
• உணவுக்கு பயனாகும் எண்ணைகளின் தயாரிப்பில் கருஞ்சீரகம் எண்ணை ஒரு நிலை நிறுத்தும் பொருளாக (Stabilizing agent) பயனாகிறது. 
• பட்டு, கம்பளி ஆடைகளின் மடிப்புகளில் கருஞ்சீரகம் விதைகளை போட்டு வைத்தால் பூச்சிகள் தாக்காது.
Note: கருஞ்சீரகத்தில், பிரம்ம தண்டு விதைகள் (Argemone mexicana) கலப்படம் செய்யப்படுகிறது. எனவே நம்பகமான கடைகளில்  கருஞ்சீரகம் வாங்க வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக