நலம் தரும் ஜாதிக்காய்
முகத்தை அழகாக்கும்: ஜாதிக்காயை சந்தனத்துடன் அரைத்து பருக்கள் மீதும், முகத்தில் உள்ள கரும் தழும்புகள் மீதும் பூசிவந்தால் அது நாளடைவில் மறையும்; முகம் பொலிவடையும் என்று கூறுகிறது சித்த மருத்துவம். ஜாதிக்காயினை அரைத்து தயாரித்த பசை தேமல், படை போன்ற தோல் வியாதிகளில் பயன்படுத்தப்படுகிறது. அம்மை கொப்புளங்கள் சரியாகும்: அம்மை நோயின் போது ஜாதிக்காய், சீரகம், சுக்கு போன்றவற்றை போடி செய்து உணவிற்கு முன் சிறிது எடுத்துக் கொண்டு வந்தால் அம்மைக் கொப்புளங்கள் தணியும் என்று சித்த மருத்துவம் கூறுகிறது. ஜாதிக்காய் அதிகம் சாப்பிட்டால் மலச்சிக்கல் உண்டாகும் என்பதையும் கருத்தில்கொள்ள வேண்டும். தசைப்பிடிப்பை நீக்கும்: ஜாதிக்காயின் விதை வாந்தியை தடுக்கக் கூடியது. ஜீரணத்தை தூண்டவல்லது. தசை வலியினைப் போக்குகிறது. விதையில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் மூட்டுவலி பக்கவாதம் ஆகியவற்றிற்கு பயன்படுகிறது. காலரா நோயின் பொழுது ஏற்படும் தசைப்பிடிப்பு வலியினை போக்க மேல் பூச்சாக உதவுகிறது. இதனுடைய வடிநீர் காலரா நோயாளிகளின் தண்ணீர் தாகத்தினைச் சரிப்படுத்தும். ஜாதிக்காய்த் தூளை சிறிது நீரில் போட்டு ஊற வைத்து குடித்து வந்தால் நா வறட்சி சரியாகும். ஜாதிக்காயின் விதைகளின் மேல் சூழ்ந்துள்ள சிவப்பு நிற திசு ஜாதிபத்ரி எனப்படுகிறது. ஜாதிக்காய் மற்றும் ஜாதிபத்ரி வயிற்றுப் போக்கு, உப்புசம், குடல்வலி, ஆகியவற்றினை போக்க உதவுகிறது. பிறந்த குழந்தைகளுக்கு வயிறு உப்புசம் ஏற்படாமல் இருக்க ஜாதிக்காய் விதையை அரைத்து குடிக்க கொடுப்பார்கள். ஜாதிக்காய், சுக்கு மற்றும் ஓமம் மூன்றின் பொடி ஜீரணத்திற்கு சிறந்த மருந்தாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக