புதன், 29 மே, 2013

கறிவேப்பிலை

கறிவேப்பிலை ஒரு சத்து நிறைந்த கீரையாகும். இதில் 63 சதம் நீரும், 6.1 சதவீதம் புரதமும், ஒரு விழுக்காடு கொழுப்பும், 4 விழுக்காடு தாதுப்புகளும், 6.4 சதவீதம் நார்ச்சத்தும், 18.7 சதவீதம் மாவுச்சத்தும் இருக்கின்றன. இந்த கீரை 108 கலோரி சக்தியை கொடுக்கிறது. சுண்ணாம்பு சத்து. மக்னீசியம். மணிச்சத்து, இரும்பு சத்து, தாமிர சத்து, கந்தக சத்து மற்றும் குளோரின், ஆக்ஸாலிக் ஆஸிட் முதலியன சத்தும் இந்த தழையில் உண்டு.

கருவேப்பிலை ஒரு வெப்ப மண்டலப் பயிராகும். இது வெப்ப மண்டல ஆசியாவில் மிக நன்றாக வளரக்கூடியது. இதனைக் கறிவேப்பிலை, கருவேப்பிலை, கறிய என்றும் குறிப்பிடுவார்கள். கறிவேப்பிலை வேம்பு இலைப் போன்ற தோற்றமளிக்கும். ஆனால் கறி வேப்பிலை வேப்பம் இலையைப் போக் பச்சையாக இல்லாமல் சற்று கரும்பச்சை நிறமாக இருக்கும். மரத்தின் பட்டையும் சிறிது சுறுசுறுப்பாக இருக்கும். இதனாலேயே இதனைக் கறுவேம்பு என்பர். இதை ஒட்டியே வடமொழியில் ‘காலசாகம்’ என்ற பெயர் கருவேப்பிலைக்கு ஏற்பட்டுள்ளது. இதனைக் கால்க்ஸ் என்றால் செம்பு என்னும் பொருள்படக்கூடியது. இந்த மரம் செம்புநிறச் சாயல் உள்ள காரணத்தினால் இப்பெயர் சூட்டப்பட்டிருக்கலாம்.

கறிவேப்பிலையில் இரண்டு வகை உண்டு, அவை நாட்டுக்கறிவேப்பிலை, காட்டுக்கறிவேப்பிலை என்ற இரு வகையாகும்.

நாட்டுக் கறிவேப்பிலை உணவாகவும், காட்டுக்கறிவேப்பிலை மருந்தாகவும் பயன்படுகிறது. காட்டுக் கறிவேப்பிலையின் இலை சற்றுப் பெரிதாகவும் கசப்பு அதிகம் உள்ளதாகவும் இருக்கும். நாட்டுக் கறிவேப்பிலை இலை அதனைவிடச் சிறிதாகவும், இனிப்பும், துவர்ப்பும் நறுமணமும் உள்ளதாக இருக்கும்.

பூக்கள் கொத்தாக அமைந்திருக்கம், கறிவேப்பிலைப் பழம் உருண்டை வடிவாக கொண்டது. இந்த பழம் சதைப்பற்றாக இருக்கும். காய் பழுத்து சிவப்பாகி பின்னர் கருப்பு நிறமாக மாறிவிடும். கறிவேப்பிலையின் இலை, ஈர்க்கு,பட்டை, வேர் முதலியன உணவாகவும் மருந்தாகவும் பயன்படுகிறது.

இவ்விலை உணவுக்கு ஒருவித நறுமணத்தைக் கொடுப்பதால் இந்தியர்கள் பெரும்பாலனவர்கள் வீட்டில் சமைக்கப்படும் உணவில் குழம்பு, மிளகுநீர், நீர்மோர், தயிரலும் இதனை தாளிதம் செய்து சேர்ப்பார்கள்.

சமையலுக்கு பயன்படும் காய்கறிகளுடன் இந்த கறிவேப்பிலையை சேர்ப்பது மிக பழமையான காலந்தொட்டே நம் நாட்டில் உள்ளது. எனவே தான் இதற்கு கறிவேப்பிலை என பெயர் வந்தது.

கறிவேப்பிலைக்கு மணமும், குணமும் சிறப்பாக இருப்பதால் துவையல் செய்தும் சாப்பிடலாம், இதில் காரப்பொடி செய்து நெய் சேர்த்து உணவுடன் சாப்பிடலாம்.

100 கிராம் கீரையில் 830 மில்லி கிராம் சுண்ணாம்புச் சத்தும், 221 மில்லி கிராம் மக்னீசியச் சத்தும், 132 மி.கி, இரும்புச் சத்தும், 0.21 மி. கிராம் தாமிரச் சத்தும், 81 மி. கிராம் கந்தகச் சத்தும், 198 மி, கிராம் குளோரின் சத்தும் உள்ளன.

உயிர்சத்து மிகுதியாக உள்ள இந்த கீரையில் வைட்டமின் A 12.600 அனைத்துவகை அலகு கொண்டதாகும். உடலுக்கு பலம் உண்டாக்கக்கூடியது. பசியைத் தூண்டும் சக்தி வாய்ந்தது. பித்த த்தைத் தணித்து உடல் சூட்டை ஆற்றும் குணம் உடையது. இந்த கீரை மனதிற்கு உற்சாகத்தைக் கொடுக்கவல்லது.

கறிவேப்பிலை குமட்டல், சீதபேதியால் வரும் வயிற்று உழைவு, நாட்பட்ட காய்ச்சல் நீங்கும். இக்கறிவேப்பிலையால் பித்த மிகுதியால் வந்த பைத்திய நோய்களும் விலகுவதாகச் 'சித்தர் வாசுட நூலில்’ உள்ளன.

இதன் இலை, பட்டை, வேர் இவைகளை கசாயம் செய்து கொடுத்தால் பித்தம், வாந்தி நீங்கும். நிழலில் உலர்த்திய கறிவேப்பிலையை இத்துடன் மிளகு, உப்பு, சீரகம், சுக்கு முதலியவற்றை பொடியாக்கி சோற்றுடன் நெய் கலந்து சாப்பிட, மந்த பேதி, மலதோஷம், மலக்கட்டு, கிரகனி, கழிச்சல்நோய், பிரமேகட்டு நோய்கள் குணமாகும்.

இந்த கீரையுடன் சுட்ட புளி, வறுத்த உப்பு, வறுத்த மிளகாய் சேர்த்து துவையல் செய்து சாப்பிட குடலுக்கு பலத்தைக் கொடுக்கும். கறிவேப்பிலை ஈர்க்கின் முலைப்பாலிட்டு இடித்து சாறு பிழிந்து கிராம்பு, திப்பிலி சேர்த்து மூன்றுமுறை குழந்தைகளுக்கு ஊட்ட வாந்தி நிற்கும். பசி மற்றும் உணவு உண்ணும் வேட்கை மிகுதிப்படும்.

உணவுடன் சேர்க்கப்படும் கறிவேப்பிலை இலைகளை உணவுக்கு மணம் ஊட்டிய பின் நீக்கிவிட வேண்டும் என்று தேவையில்லை. உணவோடு அதனைச் சேர்த்து உண்பதே சிறந்தது. இவ்வாறு உணவுடன் செல்லும் இந்த கறிவேப்பிலை மலத்தின் திராவம் சத்தை வற்றச் செய்யவல்லது. வயிற்றிலுள்ள வாயுவைப் பிரித்து மலவாயுக் கட்டு ஏற்படாமல் பாதுகாக்கும். நல்ல பசி, ருசி, ஜீரண சக்தியைத் தரும். மலக்கட்டு வாயுக்கட்டுகளைப் போக்கி மலத்தை வெளியாக்கவல்லது.

இஞ்சி, கருவேப்பிலை, கொத்தமல்லி இந்த மூன்றும் ஜீரண உறுப்புக்களின் நண்பன் என்று கூறலாம்.

இத்தனை சிறப்படைய கறிவேப்பிலையை தமிழ்பாடல் கீழ்கண்டவாறு அழகாக பாடப்பட்டுள்ளது.

‘கறிவேப்பிலையோ வேப்பிலை
காய்கறிக் கெல்லாம் தாய்ப்பிள்ளை’


இந்த தாய்பிள்ளையான கறிவேப்பிலையை நாம் ஒவ்வொருவரும் வீட்டுத் தோட்டங்களில் வளர்த்து வருவோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக