சனி, 23 பிப்ரவரி, 2013

மனித வாழ்க்கைக் காலத்தில் பிள்ளைப் பருவ முக்கியத்துவம்.

மனித வாழ்க்கைக்கால விருத்திப் பருவங்களில் பிள்ளைப்பருவம் மிக முக்கியமானது. இங்கு விருத்தி என்ற எண்ணக்கரு முன்னேற்றகரமான மாற்றங்களைக் குறித்து நிற்கின்றது.
எல்லா மாற்றங்களையும் விருத்தியாகக் கொள்ளவும் முடியாது. உளவியல் ரீதியாக விருத்தி பற்றி நோக்கும்போது; உடல், அறிவு, நடத்தை, ஆளுமை மாற்றங்கள் பிறப்பிலிருந்து தொடர்ச்சியாக நிகழ்கின்றமையை ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன.

19 ஆம் நூற்றாண்டிலிருந்தே மனித நடத்தை பற்றிய விஞ்ஞான ரீதியான உளவியல் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த ஆய்வுகளை நடத்திய உளவியலாளர்களால் மனித இயல்புகள், பிள்ளையின் விருத்தி பற்றிய முழு விளக்கத்தையும் பெற முயலவில்லை.

நடத்தை பற்றிய சில நோக்குகளில் மட்டும் ஆர்வம் கொண்ட வெவ்வேறு பிரிவுகளை அவர்கள் அமைத்தார்கள். அவர்களுடைய ஆய்வு நோக்கங்கள், முறைகள் வெவ்வேறாக இருந்தன. மேலும் இவர்களது ஆய்வுகள், தரவுகள் மென்மேலும் அதிகரிக்கச் செய்தனவே ஒழிய தொடர்ச்சியான முறையில் விருத்தியின் வடிவங்களை வழங்குவதற்கு ஒன்றிணைக்கப்படவில்லை.

உதாரணமாக ஞாபகம் பற்றிய கட்டுப்படுத்திய பரிசோதனை ஆய்வு நுண்ணறிவைக் கணித்து அளவிடுவதற்கு தொடர்ப்படுத்தப்பட்டிருக்கலாம். அத்தோடு இந்த ஆய்வால் பிள்ளையின் ஞாபக சக்தி எப்படி மாறுகின்றது எனக் கூற முடியவில்லை.

எனினும் பல்வேறு உளவியல் விஞ்ஞான ஆய்வுகள் பிள்ளைப்பருவ விருத்திசார் முக்கியங்களை எடுத்தியம்புகின்றன. இவற்றினூடாக பிள்ளை விருத்தி பற்றிய விடயங்களை அறிய முடிகின்றது.

மனித வளர்ச்சிப் பருவங்களில் பிள்ளை பற்றிய ஆய்வுகளிலே குறுக்குவெட்டு ஆய்வுமுறை, நெடுங்கோட்டு அல்லது நெடுக்குவெட்டு ஆய்வுமுறைகள் ஆய்வின் நோக்கம் கருதி மேற்கொள்ளப்படுகின்றன. ஆயினும் இங்கு நெடுங்கோட்டு ஆய்வே கூடுதலாகப் பிரயோகிக்கப்படுகின்றது.

நடைமுறை விருத்திசார் உளவியலிலே ஆர்னல்ட் கெசல் (18801961) முதிர்ச்சிப் பொறிமுறைக்கு  முக்கியத்துவம் கொடுத்து நெடுங்கோட்டு ஆய்வு மூலம் 15 வயது வரையான பிள்ளைகளின் இயல்புகளை ஆராய்ந்தார்.

சுய ஒழுங்குபடுத்தலினூடாக பிள்ளையிடம் உளவிருத்தி ஏற்படுவதைத் தனது ஆய்வு மூலம் உறுதிப்படுத்தினார். மனித விருத்திப் பருவங்களில் மிக முக்கியமான பிள்ளை பற்றிய விஞ்ஞான ரீதியான ஆய்வுகளைச் செய்பவர்கள் இன்று நெடுங்கோட்டு ஆய்வு முறைகளையே பின்பற்றுகின்றனர்.

இதற்குக் குறைந்த அளவிலான மாதிரிகளைப் பயன்படுத்த வேண்டும் என்ற வரையறை உண்டு. ஏனெனில் பெருந்தொகையான மாதிரிகளைக் கொண்ட நீண்ட காலத்துக்கு ஆய்வுகளைச் செய்வது கடினமாகும். நெடுங்கோட்டு ஆய்வுகளின் முக்கிய நன்மை பிள்ளையின் வளர்ச்சிக் கோலம் எவ்வாறு தொடர்ச்சியாக நிகழ்கின்றது என்பதைக் கண்டறிய முடியும்.

அத்துடன் முன்னர் நிகழ்ந்ததையும், பின்னர் நிகழ்ந்ததையும் ஒப்பிட்டு நோக்க வாய்ப்புண்டு. இதன் மூலம் நடத்தைக்கும், விருத்திக்கு முள்ள தொடர்புகளை விளங்கிக் கொள்ள முடியும். நெடுங்கோட்டு ஆய்வுகள் செலவு மிக்கவை, நீண்ட காலம் கொண்டவை.

தனியார் ஒருவரால் இதனைச் செய்ய முடியாது. தற்போது இத்தகைய ஆய்வுகள் பல்வேறு நிறுவனங்களைச் சார்ந்த ஆய்வாளர் குழுக்களினாலேயே செய்யப்படுகின்றன.
இந் நெடுங்கோட்டு ஆய்வுகளின் அடுத்த பிரச்சினை நீண்ட காலப்பகுதிக்குப் பரிசோதனைக் குட்படுபவர்கள் ஆய்வு செய்யப்படும் போது பரீட்சை உணர்வைப் பெற்று அதன் வயப்பட நேரிடலாம்.

ஆய்வு முறைகளில் அவதானம்

பிள்ளை பற்றிய ஆய்வுகளுக்கும் பெற்றோர் வைத்திருக்கும் பிள்ளைகளின் வாழ்க்கைக் குறிப்புகள், இயற்கையான ஆற்றல்கள், ஆர்வங்கள், சமூகவிருத்தி, விளையாட்டுக்கள், பழக்கவழக்கங்கள், பேச்சு, உடல் வளர்ச்சிகள் , மனவெழுச்சி நிலைகள் முக்கியமானவையாகவுள்ளன.

இவற்றின் மாற்றங்களை அவதானிப்பு முறையைப் பயன்படுத்தி முழுமையாக அறிய முடியும். பிள்ளை விருத்தி ஆய்வுகளில் இன்று அவதானம் ஓர் ஆய்வு முறையாக வளர்ச்சி பெற்றுள்ளது. இந்த முறையை சிறப்பாகப் பயன்படுத்த நவீன கமராக்கள், சாதனங்கள், கணினிகள் தற்போது கையாளப்படுகின்றன.

பிள்ளை விருத்தி சார் உளவியலாளர்கள் பல்வேறு ஆய்வுகளில் இருந்து பெறப்பட்ட  நியமங்கள் மற்றும் உளவியல், உயிரியல், மானுடவியல், உடலியல், பிறப்புரிமையியல் என்பவற்றில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு முடிவுகளையும் தம் முன் இணைத்துக் கொண்டனர்.

இந்த ஆய்வுகளின் பேறுகள் மூலம் பிள்ளைகளின் விருத்திக் கோலங்கள், நியமங்கள், அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், கற்றல் தொடர்பான விடயங்கள் அவர்களது பிறழ்வுகளுக்கான காரணங்கள், அவர்களுக்கு வழங்க வேண்டிய ஆலோசனை வழிகாட்டல் செயல்முறைகளை அறிந்து கொள்ளலாம்.

இதன் மூலமாக அவர்களை சிறந்த எதிர்காலப் பிரஜைகளாக்கலாம். மேற்குறிப்பிட்ட ஆய்வுகளினூடாக பிள்ளை விருத்தி பற்றிய கொள்கைகள் உருவாகியமை பற்றி இனிக் கவனிப்பது பொருத்தமாக இருக்கும்.

விருத்திசார் ஆய்வுகள்

ஏனைய விஞ்ஞானத்துறைகள் போன்று உளவியல் ரீதியான பிள்ளைகள் பற்றிய விஞ்ஞான ஆய்வுகளும் பிள்ளை விருத்திபற்றிய கொள்கைகள் எழக்காரணமாக அமைந்தன. ஒரு கொள்கை எதிர்கால ஆய்வுகளுக்குத் தேவையான கருதுகோள்களை  வழங்குகின்றது.

மேலும் உருவாக்கப்பட்ட கொள்கைகளைப் பரிசீலனை செய்ய உதவுகின்றது. பிள்ளை விருத்தி பற்றிய வினாக்கள் யார்? எது? ஏன்? எப்போது? என்ற முறையில் அமையும். சகல குழந்தை உளவியலாளர்களும் இவைபற்றிய ஒருமித்த கருத்தைப் பகிர்ந்து கொள்ளவில்லை.

சில விடயங்களில் ஒத்த தன்மையையும் கட்டினார்கள். இந்த வகையில்; உயிரியல் கொள்கைகள், சூழல்சார் அல்லது கற்றல் கொள்கைகள் உயிரியல் சூழல் இடைத்தாக்கக் கொள்கைகள் உளபகுப்பாய்வுக் கொள்கைகள் முக்கியமானவையாகவுள்ளன.

பிள்ளையின் விருத்தியில்  பரம்பரை, சூழல், முதிர்ச்சி, கற்றல் என்பன செல்வாக்குச் செலுத்துவதை இந்தக் கொள்கைகள் எடுத்தியம்புகின்றன. விருத்திசார் உளவியலில் மையப் பொருளாக அமைவது வளப்ர்பை விட இயற்கைக்கே முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றன.

அதற்கு அடுத்தபடியாகவே வளர்ப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பபடுகின்றது. பரம்பரையின் செல்வாக்கும் உயிரியல் கொள்கையில் காணப்படுகின்றது. உயிரியல் ரீதியாக பிள்ளை விருத்தியை அர்னல்ட் கெசல் முழுமையான ஆய்வு ரீதியான உயிரியல் கொள்கையை வெளியிட்டார்.

சூழல்சார் கல்விக் கொள்கை

சூழல் சார் அல்லது கற்றல் கொள்கைகள் பிள்ளை விருத்தியில் பெரும் செல்வாக்குச் செலுத்துகின்றன. கருத்தரிப்பு தொடக்கம் குழந்தை பிறந்து வளர்ந்து மரணிக்கும் வரையில் உயிர் இனங்களின் வளர்ச்சியிலும் விருத்தியிலும் செல்வாக்குச் செலுத்தும் பௌதிக, சமூக, உள உவகங்களின் ஒட்டு மொத்தமே சூழல் ஆகும்.

அமெரிக்க உளவியலாளர் ஜே.பி.வேட்சன் சூழல்சார் பிள்ளை விருத்தி செல்வாக்கை  எடுத்தியம்புகின்றார். பிரித்தானிய தத்துவஞானி ஜோன் வொக் கூறிய பிள்ளை தனது வாழ்க்கையை ஆரம்பிக்கும் போது அது ஒரு வெற்றுத்தாளாகவே இருக்கிறது.

சூழல் அனுபவங்களே அதனது விருத்தியில் முழுச் செல்வாக்கும் பெறுகின்றது என்ற கருத்தை வாட்சனும் ஏற்றுக் கொண்டார். டி.வாமா என்ற பிரான்ஸ் சூழலியல் உளவியலாளர் கருத்துப்படி புதிய உள, உடலியல் பண்புகள் சூழலின் செல்வாக்கினாலேயே பெறப்படுகின்றன.

இவை பரம்பரை பரம்பரையாக அடுத்த தலைமுறையினருக்கும் கையளிக்கப்படுகின்றது என்றார். இதனை மானுடவியலாளர்களும் ஏற்றுக் கொண்டுள்ளனர். காரல் உளவிய கொள்கைகள் எல்லாமே சூழலின் செல்வாக்கை  இயம்பி நிற்கின்றன.

உயிரியல் சூழல் இடைத்தாக்க கொள்கை


உயிரியல் சூழல் இடைத்தாக்கக் கொள்கை பிள்ளை விருத்தியில் முக்கியம் பெறுகின்றது. தனியாளர் விருத்தியில் உயிரியல் அல்லது அக விருத்திக் காரணிகளும் சூழல் காரணிகளும் வகிக்கும் பங்கு முதன்மை பெறுகின்றன.

பிள்ளை புற உலகுடன் இடைத்தாக்கத்தில் ஈடுபடுவதை உயிரியல் காரணிகள் சாத்தியமாகின்றன. பியாஜே இக் கொள்கையைப் பயன்படுத்தி அறிவுசார்  விருத்தியையும், ஒழுக்க விருத்தியையும் விளக்கினார். உயிரி சில அமைப்பு ரீதியான தன்மையைக் கொண்டது. இவ்வாறே சூழலும் உள்ளது என்பது பியாஜேயின் எடுகோளாகும்.

தனியாள் நடத்தையைத் தீர்மானிக்கும் சில அடிப்படையான உள அல்லது ஒழுக்க ரீதியான அமைப்புக்களுக்கும் இவ் இடைத்தாக்கம் இட்டுச் செல்கிறது என பியாஜே எடுத்துக் காட்டினார்.

இவரது முக்கிய இடைத்தாக்க எண்ணக்கருக்களாக திறனமைப்பு, தழுவல், ஒழுங்கமைப்பு தன்மயமாக்கல், தன்னமைவாக்கல் என்பன முக்கியம் பெறுகின்றனர். மேற்கூறப்பட்ட மூன்று கொள்கைகளில் இருந்து வேறுபட்டதாக சிக்மன் பிராய்டின்  உளப்பகுப்பாய்வுக் கொள்கை உள்ளது.

பிராய்டினுடைய கொள்கை பிள்ளை விருத்தி பற்றிய ஆய்வில், பிள்ளைப் பருவ அனுபவங்கள் அதன் பிள்ளையை விருத்தியிலும் விருத்திசாரா போக்கிலும்  கொண்டிருந்த தாக்கத்தின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டியது.

இது விருத்திசார் உளவியலில் ஒரு திருப்பு முனையாக அமைகின்றது. எனினும் உளப் பகுப்பாய்வு உளவியலுக்கும், பரிசோதனை உளவியலுக்குமிடையே பிணைப்பை ஏற்படுத்துவது சாத்தியமாகவில்லை. இவை தனித்தனியாகவே  உள்ளன.

பிராய்டின் கொள்கை தனியாள் ஒருவருடைய எழுச்சி சார்பான நடத்தை சார்பான நெறி பிறழ்வுகளை இனம் காண்பதற்கும் சிகிச்சை அளிப்பதற்கும் வடிவமைக்கப்பட்டது. விஞ்ஞானபூர்வமானது எனவும் விமர்சிக்கப்படுகிறது.

தற்போது இதில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு உளநோய் மருத்துவர்களால் மருத்துவ உளவியலில் இக் கொள்கை சிகிச்சையளிக்கப் பிரயோகிக்கப்படுகின்றது.
மேற்குறிப்பிட்ட ஒவ்வொரு கொள்கையும் எந்த அம்சங்களை வலியுறுத்துகின்றன என்பதிலேயே வேறுபாடுகள் உண்டு.

ஒரு கொள்கைவாதி உருவாக்கிய கருதுகோள்களை ஏனையோர் வெவ்வெறு முறைகளில் பரீட்சித்து ஒரே நேரத்தில் பல ஆய்வுகளை நடத்தி கொள்கைகளை  அறிவியல் ரீதியாக இணைத்துப் பார்க்கமுடியும். ஒப்பீட்டு ஆய்வுகளை மேற்கொள்ள முடியும்.

ஒரு கொள்கை சரியானது என்றோ மாறாக கொள்கை பிழையானது என்றோ கூறுவதற்கில்லை. ஒவ்வொரு கொள்கைகளிலும் வலுவான அம்சங்கள் உண்டு. மேலும் பல புதிய விடயங்களும் இவை தொடர்பான ஆய்வுகளும் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

ஓர் அனுபவம் மிக்க ஆசிரியர் அல்லது வழிகாட்டிகள் இக் கொள்கைகளை இணைத்துக் கொள்ளுமிடத்துப் பிள்ளைகளை விளங்கிக் கொள்ளவும், அவர்களுக்குக் கற்பிக்கவும் வழிகாட்டவும் பெற்றோருக்கு ஆலோசனை கூறவும் சமூகத்திற்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும் ஒன்றுக்கு மேற்பட்ட கருத்து நிலைகளில் பணிபுரிய முடியும். பல்வேறு கொள்கைகள் இருப்பதனால் அவை ஒன்றை ஒன்று முழுமைப்படுத்தவும் உதவுகின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக